தோப்பு ஊருணியில் மனித கழிவுகள் கலப்பதால் அசுத்தமாகும் தண்ணீர்
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் சக்கரக்கோட்டை ஊராட்சியில் உள்ள தோப்பு ஊருணியில் மனிதக் கழிவுகள் கலப்பதால் துர்நாற்றத்தினால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.தொடர் மழை காரணமாக தோப்பு ஊருணிக்கு நீர் வரத்து இருக்கிறது. இப்பகுதியில் புதிய கட்டுமான பணிகளுக்காக வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். இவர்களின் கழிப்பறை கழிவுகள், கழிவு நீர் அனைத்தும் ஊருணி வரத்து கால்வாயில் கலக்கிறது. இதன் காரணமாக ஊருணியில் தேங்கியுள்ள நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மனித கழிவுகளால் அப்பகுதியில் துார் நாற்றம் வீசி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக வரத்து கால்வாயில் கலக்கும் கழிவு நீர், மனித கழிவுகளை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தும் நீரை அசுத்தப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.