பரமக்குடி ஆற்றுப்பாலம் சர்வீஸ் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பு
பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றுப்பாலம் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகும் நிலையில் சர்வீஸ் ரோட்டில் வாகனங்கள் தடுமாற்றத்துடன் செல்கின்றன.ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது.இதற்காக அமைக்கப்பட்ட குழாய்கள் மற்றும் வால்வுகளில் கசிவு உண்டாகி பல இடங்களில் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறும் நிலை உள்ளது. இதனால் பலருக்கும் குடிநீர் இன்றளவும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.மேலும் வால்வு தொட்டிகளில் கசியும் குடிநீர் மீண்டும் குழாய்கள் வழியாக சென்று குடிக்க நேரிடுவதால் தொற்று நோய் பீதியில் மக்கள் உள்ளனர்.இந்நிலையில் பரமக்குடி வைகை ஆற்றுப்பாலம் பகுதியில் ஆண்டுக்கணக்கில் ஆங்காங்கே குழாய் உடைப்பு என்பது தொடர்கிறது. அவ்வப்போது பெரிய அளவில் உடைப்புகள் ஏற்பட்டு நீரூற்றுபோல் தண்ணீர் வெளியேறும் நிலை இருக்கிறது. அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் உடைப்பிலிருந்து கசிவு என்பது தொடர்கிறது. இதனால் ஆற்றுப்பாலம் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோட்டில் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி வாகனங்கள் தடுமாற்றுத்துடன் செல்கின்றன.எனவே மக்களுக்கு குடிநீர் தடை இன்றி கிடைக்கும் வகையில் குழாயை சீர் செய்வதுடன், வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.