எப்போது *நெல் கொள்முதல் நிலையங்கள் முழுமையாக திறப்பது.. *வெளிச்சந்தையில் நஷ்டம் அடையும் விவசாயிகள்
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் முழுமையாக திறக்கப்படாத நிலையில் பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வேறு வழியின்றி வெளிச்சந்தையில் விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் நிலை உள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. இதே போல் இந்த ஆண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 36 மட்டுமே திறந்துள்ளனர். தொடர்ந்து மாவட்டத்தில் நெல் விளைச்சல் அதிகமான அளவில் உள்ள நிலையில் கொள்முதல் நிலையங்கள் பரமக்குடி, முதுகுளத்துார் போன்ற பகுதிகளில் திறக்கப்படாத நிலை இருக்கிறது. இதன்படி அரசு கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ மூடையை ரூ.980க்கு வாங்குகின்றனர். ஆனால் வெளிச்சந்தையில் வியாபாரிகள் 66 கிலோ நெல் மூடை ரூ.1200க்கு மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் இல்லாத நிலையில் நீண்ட தொலைவு எடுத்துச் செல்ல முடியாமல் இந்த நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் விவசாயிகள் இருக்கின்றனர். மேலும் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் நிலையத்தில் 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்படுவர். கொள்முதல் நிலையங்களை முழுமையாக திறக்காததால் அவர்களுக்கும் வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஆகவே நெல் கொள்முதல் நிலையங்களை முழுமையாக திறந்து விவசாயிகள் லாபம் அடைய வழி வகுப்பதுடன், பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--