வயல்களில் மிளகாய் நாற்றுகளை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை, கொண்டுலாவி, எஸ்.பி.கோட்டை அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் நாற்றுகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துகின்றன. முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக முதுகுளத்துார் சுற்றுவட்டார கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் முளைக்க துவங்கியுள்ளன. இந்நிலையில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிளகாய் விவசாயம் செய்வதற்கு கண்மாய் கரை விவசாய நிலங்கள் அருகே மிளகாய் விதைகள் துாவி மிளகாய் நாற்று வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை, கொண்டுலாவி, எஸ்.பி.கோட்டை அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மிளகாய் நாற்று வளர்க்க காலை மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கிடாத்திருக்கை அதனை சுற்றியுள்ள பகுதியில் மிளகாய் நாற்றுகளை காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து சேதப்படுத்துகின்றன. இதனால் மிளகாய் நாற்று முழுவதும் வீணாகியது. முதுகுளத்துார் பகுதியில் காட்டுப்பன்றி தொல்லையால் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் அவதிப்பட்டு வரும் நிலை தொடர்கிறது. இதனால் சிலர் விவசாயத்தையே விட்டு விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகள் நலன் கருதி காட்டுப்பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.