மதுரை - ராமேஸ்வரம் இடையே இரவு நேர ரயில்கள் இயக்கப்படுமா
ராமநாதபுரம்: இரவு நேரத்தில் ராமேஸ்வரம், மதுரைக்கு இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுமா என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.பாம்பன் புதிய பாலம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஏற்கனவே ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 11:30 மணிக்கு மதுரைக்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது. அதே போல் மதுரையில் இருந்து இரவு 11:30 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்களால் இரவு நேரத்தில் சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, செங்கோட்டை பகுதியிலிருந்து ரயிலில் வரும் பயணிகள் மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பயணிக்க முடிந்தது.இது அதிகாலை 3:00 மணிக்கு ராமேஸ்வரம் வந்ததால் பயணிகள் சுவாமி தரிசனத்திற்கு எளிதாக இருந்தது.வட மாநில பயணிகளுக்கு இந்த ரயில் அதிகம் பயன்பட்டது. இரவு 11:30க்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் அதிகாலை மதுரைக்கு வருவதால் அங்கிருந்து நெல்லை, கன்னியாகுமரி, காலையில் மதுரையிலிருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க ஏதுவாக இந்த ரயில் இயக்கப்பட்டது. மதுரையிலிருந்து காய்கறி, பூ மார்க்கெட்டுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் பயனுள்ளதாக இருந்தது.தற்போது மதுரை ரயில் நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பயணித்து அதன் பிறகு பஸ்களில் பயணிக்கும் நிலையில் வீண் கால தாமதமும், அலைச்சலும் ஏற்படுகிறது.இரவு நேரத்தில் இயக்கப்பட்ட இந்த பாசஞ்சர் ரயிலை ரயில்வே நிர்வாகம் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.