உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விலை நிலமாக்க அழிக்கப்படும் பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா; தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

விலை நிலமாக்க அழிக்கப்படும் பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா; தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

சாயல்குடி,: ராமநாதபுரம் மாவட்டத்தின் அடையாளமாக உள்ள ஏராளமான பனை மரங்கள் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக வெட்டி அழிக்கும் போக்கு தொடர்வதால் பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. இதனை தடுத்து பனை மரங்களை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் ஒரு கோடிக்கு மேலான பனைமரங்கள் உள்ளன. குறிப்பாக சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் பல லட்சம் பனை மரங்கள் உள்ளன. பூலோகத்தின் கற்பகத் தருவாக விளங்கும் பனை மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்பாடு மிக்கவை.40 ஆண்டுகளுக்கு முன்பு வளர்க்கப்பட்ட பனை மரங்களே தற்போது மிகுதியான அளவில் பயன் தந்து கொண்டிருக்கின்றன. ரியல் எஸ்டேட் (விலை நிலங்களுக்காக) தொழிலுக்காக ஏராளமான பனை மரங்கள் வெட்டி அழிக்கும் போக்கு தொடர்கிறது.சாயல்குடி, மேலக்கிடாரம், மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார், நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் பனை சார்ந்த பொருட்கள் அதிகளவு கிடைக்கின்றன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளனர்.விவசாயத்திற்கு அடுத்தபடியாக பனைத் தொழில் மூலம் வருமானம் ஈட்டி வரும் நிலையில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக பல இடங்களில் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுகிறது. பனை மரங்களை காப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். பனை சார்ந்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சாயல்குடி வி.வி.ஆர்., நகர் ராஜபாண்டியன் கூறியதாவது:ஒரு பனை மரத்தை ரூ.300ல் இருந்து 500 வரை விலைக்கு வாங்கி அவற்றை பல துண்டுகளாக வெட்டி செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக லாரிகளில் வெட்டி அனுப்புகின்றனர். பனை மரத்தை வெட்ட வேண்டாம் என அரசு அறிவுறுத்தியும் பனை சார்ந்த உற்பத்தி பொருள்களுக்காக பனைமரங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.ஒரு சிலர் மரம் பட்டுப் போக வேண்டும் என்பதற்காக அதன் அடியில் நெருப்பு வைத்தும் ஆசிட் ஊற்றியும் அவற்றை விற்பதற்காக முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பனை வாரிய கூட்டுறவு சம்மேளனத்தினர் உரிய முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பனை சார்ந்த பொருட்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும் வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி