பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா...: பஸ்களை நிறுத்துவதற்கு போதுமான இடமில்லை
பரமக்குடி: பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் 40 ஆண்டுகளாக விரிவுபடுத்தப்படாமல் குறுகிய இடத்தில் உள்ளதால், பஸ்கள் நிறுத்தமுடியால் உள்ளே, வந்துசெல்லும்போது நெரிசல் ஏற்படுகிறது. போதுமான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் பஸ் ஸ்டாண்டை விரிவுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளுடன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையுடன் பரமக்குடி, எமனேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து 1964ல் உருவானது. 16 சதுர கி.மீ., ல் உருவாகிய நகராட்சியில் 30,000 மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பிரதான தொழில் கைத்தறி பட்டு நெசவு, குண்டு மிளகாய் உற்பத்தி உள்ளது. தொடர்ந்து 2024ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த பல்வேறு பகுதிகள் இணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் 1.50 ஏக்கரில் 1986ம் ஆண்டு கட்டப்பட்டு நகராட்சி மூலம் பராமரிக்கப்படுகிறது. அப்போது 25 பஸ்கள் மட்டுமே நிறுத்த இடவசதி கொண்டதாக இருந்தது. தற்போது பரமக்குடி பணிமனையில் இருந்து 80க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும் நிலையில், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களில் இருந்து தினமும் பல நூறு பஸ்கள் வந்து செல்லும் படி உள்ளது. ஆன்மிக தலமான ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு செல்ல பரமக்குடி பிரதான வழியாகும். இங்குள்ள பஸ் ஸ்டாண்டில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. மேலும் பயணிகள் நிற்பதற்கு கூட இட வசதியின்றி பஸ் ஸ்டாண்ட் கடைகள் முன்பு ஒட்டுமொத்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பஸ்கள் நிறுத்தி பயணிகள் ஏறி, இறங்க போதிய ரேக் வசதி இல்லாததால் ஆங்காங்கே நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது. இதனால் பயணிகளும் அலைந்து சிரமப்படுகின்றனர். ஆகவே மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகராட்சியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் பஸ் ஸ்டாண்டை விரிவுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.