உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  சாலையை சீரமைக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

 சாலையை சீரமைக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

திருவாடானை: சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்தும் பயனில்லை என்று கிராம மக்கள் கூறினர். திருவாடானை அருகே குளத்துாரில் இருந்து கீழஅரும்பூருக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. 4 கி.மீ., உள்ள இச்சாலை ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமானது. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்ததால் இக்கிராமத்திற்கு செல்லும் டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. அதிகாரிகளிடத்தில் பலமுறை முறையிட்டும் பயனில்லாததால் டிச.,15 ல் கீழஅரும்பூர் கிராம மக்கள் சாலையை சீரமைக்கக் கோரி அரும்பூர் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து நேற்று திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாசில்தார் ஆண்டி சென்று சமரசம் செய்தார். சாலையை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டிற்கு பின் சாலை சீரமைக்கப்படும் என்றார். அதனை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இது குறித்து கீழஅரும்பூர் நாச்சியார் கூறியதாவது: மழைக் காலத்தில் நடக்கக் கூட முடியவில்லை. டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பெரும் சிரமமாக உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடந்த போது மனுக்கள் கொடுக்கப்பட்டது. மூன்று மாதத்திற்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிச.,15 ல் கீழ அரும்பூர் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். நேற்று திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டோம். அடுத்ததாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை