உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் கருப்பு கொடி ஏந்தி பெண்கள் போராட்டம்

குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் கருப்பு கொடி ஏந்தி பெண்கள் போராட்டம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தட்டனேந்தல் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் வராததால் முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் கருப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதுகுளத்துார் தட்டனேந்தல் கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் வருவதில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் திட்டம் துவங்கிய நாள் முதல் இப்பகுதியில் குடிநீர் வருவது கிடையாது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பயனில்லை. டிராக்டர் தண்ணீரை குடம் ரூ.15க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சில நாட்களில் டிராக்டருக்காக நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் வேலைக்கும், அத்தியாவசியப் பணிக்கும் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமத்தில் குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நுாதன முறையில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. பின்பு மறுநாள் குடிநீர் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு குடிநீர் மீண்டும் வரவில்லை. தற்போது பழைய நிலைக்கு மாறி குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடத்துடன் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் வாக்காளர் அடையாள அட்டை அலுவலக நுழைவு வாயில் முன்பு துாக்கி வீசினர். இதுகுறித்து தகவலறிந்த பி.டி.ஓ., பாலதண்டாயுதம் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குடிதண்ணீர் தினந்தோறும் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை எடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ