மகப்பேறு நிதி உதவித்தொகை கிடைக்காமல் பெண்கள் அதிருப்தி
தொண்டி:மகப்பேறு உதவித்தொகை திட்டத்தில் நிதி உதவி கிடைக்காததால் பெண்கள் அதிருப்தியடைந்துள்ளனர். கர்ப்பிணிகளின் நலனுக்காக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் பகுதி பெண்களுக்கு இத்திட்டத்தில் வழங்கப்படும் நிதி கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் சங்க சேவை சங்க தலைவர் காசிம் கூறியதாவது: எஸ்.பி.பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 51 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு கர்ப்பிணிகளுக்கு வழங்கக்கூடிய மகப்பேறு நிதி உதவி ஓராண்டாகியும் கிடைக்கவில்லை. கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பெட்டகமும் வழங்கவில்லை. வாரந்தோறும் செவ்வாய் அன்று வழங்க வேண்டிய மதிய உணவும் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது என்றார்.