கிராமங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணிகள் மும்முரம்: மழை பெய்வதால் சாதகம்
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளான நைனாமரைக்கான், பத்திராதரவை, வண்ணாங்குண்டு, பெரியபட்டினம், முத்துப்பேட்டை, தினைக்குளம், களிமண்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெருவாரியாக பயிர் குழி எனப்படும் வீட்டுத் தோட்டங்கள் மூலம் காய்கறிகள் விளைவிக்கின்றனர். தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி ஏற்கனவே உழுது வைத்துள்ள இடங்கள் மற்றும் வீட்டருகே உள்ள நிலப் பகுதிகளில் இயற்கை உரங்களை கலந்து வைத்துள்ளனர். அவற்றில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சுரக்காய் உள்ளிட்ட கொடியில் படரும் தன்மை கொண்டவைகளுக்கு பந்தல் அமைக்கின்றனர். அதே போல் கத்திரிக்காய், தக்காளி, மற்றும் கீரை வகைகள் உள்ளிட்ட செடிகளையும் நட்டு வைத்து 4 மாதங்களுக்கு சாகுபடி செய்கின்றனர். அக்., இறுதி வாரத்தில் இருந்து நவ., டிச., ஜன., பிப்., வரை காய்கறிகளை விளைவிக்கின்றனர். அதிகமாக விளைவிக்கக்கூடிய காய்கறிகளை ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட நகர் பகுதிகள் மார்க்கெட் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். மீதமுள்ள காய்கறிகளை உணவு தேவைக்காகவும் பயன்படுத்துகின்றனர்.