கிழக்கு கடற்கரை சாலையை புதுப்பிக்கும் பணி துவக்கம்
தொண்டி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கிழக்கு கடற்கரை சாலையை உயர்த்தி அமைக்கும் பணிகள் துவங்கியது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையானது கன்னிராஜபுரம், சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, திருப்புல்லாணி, ராமநாதபுரம், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, உப்பூர், நம்புதாளை, தொண்டி, பாசிபட்டினம், எஸ்.பி. பட்டினம் வழியாக செல்கிறது.கன்னியாகுமரி - சென்னையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் இதில் செல்கின்றன. ராமநாதபுரத்தில் இருந்து எஸ்.பி.பட்டினம் வரை பல்வேறு பகுதிகளில் ரோட்டின் நடுவில் அதிகளவில் பள்ளங்கள் இருந்தது.இதனால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்தது. சாலையோர சீமைக்கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் அடிக்கடி செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையை உயர்த்தி அமைக்கும் பணிகள் துவங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.