கிராமப்புறங்களில் உள்ள கிளை நுாலகங்கள் இருக்கு.. ஆனா இல்ல...
தமிழ்நாடு அரசின் பொது நுாலக இயக்ககம் கட்டுப்பாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மாவட்ட மைய நுாலகம், 8 முழு நேர கிளை நுாலகங்கள், 49 கிளை நுாலகங்கள், 25 ஊர்ப்புற நுாலகங்கள், 5 பகுதிநேர நுாலகங்கள் என மொத்தம் 88 நுாலகங்கள் செயல்படுகின்றன. இதில் மைய நுாலகமும், முழுநேர கிளை நுாலகமும் அரசு நுாலகர்களின் கட்டுப்பாட்டில் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படுகிறது. கிளை நுாலகங்கள், கிராமப்புற நுாலகங்கள் காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட வேண்டும். ஆனால் அவை பெரும்பாலான நேரங்களில் திறக்காமல் மூடியே உள்ளன. சில நுாலங்களில் போதிய அளவில் புத்தகங்கள் கூட இல்லாத நிலையில் செயல்படுகின்றன. இதுகுறித்து வாசகர்கள் கூறியதாவது: கிராமப்புறங்களில் உள்ள நுாலகங்களுக்கு நேரம் என்றெல்லாம் கிடையாது. பெரும்பாலும் ஒரு நாளில் 2 முதல் 3 மணி நேரம் திறந்திருக்கும். இந்த நுாலகங்களில் தற்காலிக பணியாளர்கள் தான் பெரும்பாலும் பணிபுரிகின்றனர். அதனால் சிலர் முறையாக வந்து திறப்பதில்லை.கிராமப்புற மக்களின் கல்வி அறிவில் கிளை நுாலகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் முறையான பராமரிப்பு, நேர மேலாண்மை இல்லாததால் நுாலகம் வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே போல் கிளை நுாலகங்களில் புத்தகங்கள் போதிய அளவில் இருப்பதில்லை. வாசகர் வருகையை அதிகரிக்க கிளை நுாலகங்களில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்களை கொண்டு வாசகர் வட்டம் ஏற்படுத்த வேண்டும் என்றார். இது குறித்து நுாலக அலுவலர்களிடம் கேட்ட போது, கிளை நுாலகங்களுக்கு உள்ளூரை சேர்ந்தவர்கள் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் தினமும் நுாலகத்தை திறந்து வாசகர்கள் வருகையை பதிவு செய்கின்றனர். நுாலகங்களை முறையாக திறக்கப்படாத சூழலில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.