100 நாள் ஊழியர்கள் மறியல்; தாசில்தார் கிரேட் எஸ்கேப்
ஆற்காடு; நுாறு நாள் வேலை பணியாளர்கள் போராட்டத்தை பார்த்த தாசில்தார், மாற்று பாதையில் வாகனத்தை திருப்பி சென்றார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த புது மாங்காட்டில், அக்., 11ல் கிராம சபை கூட்டம் நடந்தது. அப்போது, 100 நாள் திட்ட பணிகளில் ஈடுபட்ட, 60க்கும் மேற்பட்ட பணியாளர்களை, முதல்வர் காணொலியில் பங்கேற்கும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கும்படி, அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி, கூட்டத்தில் பங்கேற்ற, 100 நாள் வேலை பணியாளர்கள், மீண்டும் பணியில் ஈடுபட்ட போது, அவர்களின் வருகை பதிவை ஏற்றுக்கொள்ளாமல், அதிகாரிகள் கூலி வழங்க முடியாது என, கூறியுள்ளனர். நேற்று பணிக்கு சென்றவர்களையும், வேலை வழங்காமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து, நுாற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆற்காடு - கலவை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஆற்காடு தாசில்தார், போராட்டத்தை பார்த்ததும், வாகனத்தை நிறுத்தாமல் வேறு வழியில் திரும்பி சென்று விட்டார். பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டிய அதிகாரிகளே கண்டு கொள்ளாமல் சென்றதால், பணியாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.