சிறுவனை வெட்டிய கொள்ளையனை கண்டித்து மக்கள் சாலை மறியல்
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த அண்ணாமலை நகரை சேர்ந்த ராணுவ வீரர் ராஜேந்திரன் 41. இவர் மனைவி அலமேலு, 35. இவர்களது மகன் சோனு, 13. இவர், அப்பகுதியிலுள்ள பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை, 8:30 மணிக்கு அலமேலுவும், சோனுவும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டிற்குள் ஒரு முகமூடி கொள்ளையன் புகுந்து, சோனுவின் கழுத்தில் கத்தியை வைத்து, அலமேலுவிடம், நகை மற்றும் பணத்தை தரக்கேட்டு மிரட்டினார். பயந்த அலமேலு அலறி கூச்சலிட்டார்.அப்போது முகமூடி கொள்ளையன் கத்தியால் சிறுவனின் விரலை அறுத்தும், கையிலும் வெட்டினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் முகமூடி கொள்ளையன் அங்கிருந்து தப்பினான். பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் முகமூடி கொள்ளையனை கைது செய்ய வலியுறுத்தி, பனப்பாக்கம் - ஓச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நெமிலி போலீசார் பேச்சு நடத்தி மறியலை கைவிடச் செய்து விசாரிக்கின்றனர்.