உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்தவரை அடித்த எஸ்.ஐ.,

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்தவரை அடித்த எஸ்.ஐ.,

ராணிப்பேட்டை:'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் வி.ஏ.ஓ., மற்றும் போலீஸ் எஸ்.ஐ., தாக்கியதில் மனு அளிக்க வந்தவர் பலத்த காயமடைந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், சாத்துார் கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. இதில், உப்புபேட்டை கிராமம், கணபதி நகரை சேர்ந்த வெங்கடபதி, 55, அப்பகுதியில் வனப்பகுதிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றி, வனத்துறையினரிடம் ஒப்படைக்க, கோரிக்கை மனு அளித்து, ஒப்புகை ரசீது கேட்டார். அங்கிருந்த சாத்துார் வி.ஏ.ஓ., சாபுதீன், 45, என்பவர், வெங்கடபதியை பலமாக தாக்கி கீழே தள்ளினார். வலி தாங்க முடியாமல் தள்ளாடிய படியே எழுந்த அவர், 'ஏன் என்னை அடித்தாய்?' என கேட்டவாறு, வி.ஏ.ஓ.,வை முட்டி தள்ளினார். அங்கிருந்த போலீஸ் எஸ்.ஐ., பிரபாகரன், 'அரசு ஊழியரையே தாக்குகிறாயா?' என, ஆவேசமாக வெங்கடபதியை தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த வெங்கடபதி, ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வி.ஏ.ஓ., சங்கத்தினர், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த வெங்கடபதி மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளித்தனர். ஆற்காடு தாலுகா போலீசார், வெங்கடபதியை கைது செய்தனர். அன்புமணி கண்டனம் பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கேள்வி கேட்டவரை வி.ஏ.ஓ.,வும், எஸ்.ஐ.,யும் அடித்து உதைத்துள்ளனர். 'மனிதத்தன்மையற்ற இந்த செயல் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என, கண்டனம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
செப் 06, 2025 23:44

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தன் சொந்த பிரச்னை தொடர்பாகத்தான் மனு கொடுக்கணும். நீ சமூகநீதி கேட்டு பெரிய பிஸ்தா மாதிரி மனு கொடுத்தால் இப்படித்தான் மரியாதை கொடுப்போம் என மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை