உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / ரயில் பயணியிடம் நகை, பணம் திருட்டு மதுரை பெண்கள் இருவர் கைது

ரயில் பயணியிடம் நகை, பணம் திருட்டு மதுரை பெண்கள் இருவர் கைது

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி 55; சென்னை ஆவடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அக்.1ம் தேதி அரக்கோணத்தில் நகை வாங்குவதற்காக 60,000 ரூபாய், 12 கிராம் தங்க நகை, 40 கிராம் வெள்ளி பொருட்களுடன் அரக்கோணத்திற்கு மின்சார ரயிலில் வந்தார். அரக்கோணம் ரயில்வே பிளாட்பாரத்தில் இறங்கி லிப்ட்டில் ஏற முயன்றார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அவரது பையை மர்ம நபர்கள் பறித்தனர். ராஜராஜேஸ்வரி கூச்சலிட்டார். அப்போது, அங்கிருந்த நான்கு பெண்கள் நழுவ முயன்றதை பார்த்த ராஜராஜேஸ்வரி, பொதுமக்கள் உதவியுடன் இரு பெண்களை விரட்டி சென்று பிடித்து, அரக்கோணம் ரயில்வே போலீசில் ஒப்படைத்தார். மற்ற இரு பெண்கள் தப்பினர். விசாரணையில், அவர்கள், மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்த அனிதா, 48, பிரியா, 38, எனவும் இவர்கள், கும்பலாக பல்வேறு இடங்களில் பயணியரிடம் நகை, பர்ஸ் திருடியது தெரிந்தது. அனிதா, பிரியாவை கைது செய்த போலீசார் வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர். நகை, பணத்தை திருடிச் சென்ற மற்ற இரு பெண்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !