மேலும் செய்திகள்
இயற்கை உரம் தயாரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
09-Jan-2025
'பேப்பர் டீ கப்'பில் இயற்கை உரம் வேளாண் உதவி இயக்குனர் 'ஜடியா' பனமரத்துப்பட்டி, : காகிதத்தில் தயாரிக்கப்படும் கோப்பை பேப்பர் கப், ஓட்டல், டீக்கடை, காபி பார், ஜூஸ் கடை, கரும்புச்சாறு கடைகளில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு, குப்பையில் வீசுகின்றனர். அந்த பேப்பர் கப்பில் இயற்கை உரம் தயாரித்து பயன்படுத்தலாம்; விற்பனை செய்து வருவாயும் ஈட்டலாம்.இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் கூறியதாவது:காகித கோப்பைகளை கொண்டு, இயற்கை உரம் தயாரிக்க தேவையான பொருட்கள்: காகித தேநீர் கோப்பை, தேநீர் கழிவு(டீத்துாள்), ஈரப்பதமற்ற காய்ந்த தாவர இலைகள், தொழு உரம், குப்பையை மட்க செய்யும் கலவை, மண் கரைசல், நுண்ணுயிரி பெருக்கி மாத்திரை கொண்டு தயாரிக்கலாம்.ஓர் அடி ஆழமுள்ள சிமென்ட் தொட்டி அல்லது ஆழமான குழிகளை தேர்வு செய்ய வேண்டும். அதில் ஈரம் இல்லாத காய்ந்த இலைகள், காகித கோப்பைக்கு சமமான அளவில் நிரப்ப வேண்டும். காய்ந்த இலைகளை பயன்படுத்துவதன் மூலம் உரத்தின் கார்பன் தன்மையை அதிகரித்து, எளிதாக மட்க செய்யலாம்.இரண்டாவதாக காகித கோப்பைகளை நீரில் கொதிக்க வைத்து, அதன் மெழுகு தன்மை நீங்கிய பின் தொட்டியில் நிரப்ப வேண்டும். பின், அதன் மீது சிறிதளவு நீர் மேலோட்டமாக தெளிக்க வேண்டும்.மூன்றாவதாக, மண்ணை கரைத்து தெளிக்க வேண்டும். ஏனெனில் மண்கலவை நுண்ணுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும்.நான்காவதாக தொழு உரம், 5 கிலோ வரை நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். தொழு உரத்தில் தழைச்சத்து மிகுதியாக உள்ளது. இறுதியாக சாணி கரைசலை தெளித்து காய்ந்த இலைகளை மேலே நிரப்ப வேண்டும்.அதற்கு மேல் நுண்ணுயிரி பெருக்கி ஒரு மாத்திரையை, 5 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும். இறுதியாக சணல் பையை கொண்டு மூட வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை உரப்படுக்கையை திருப்புதல், மட்கும் தன்மையை எளிமையாக்கும். 60 முதல், 70 நாட்களில் அனைத்து பொருட்களும் நன்கு மட்கி, நல்ல உரமாக மாறிவிடும். அதை வயலுக்கு இடலாம். வீட்டு தோட்டம், மாடி தோட்டத்துக்கு உரமாக பயன்படுத்தலாம். கூடுதலாக இருந்தால், 1 கிலோ வீதம், பைகளில் அடைத்து விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம்.மட்கிய காகித கோப்பை உரத்தில் நைட்ரஜன், 1.2 சதவீதம், பாஸ்பரஸ், 0.12, பொட்டாசியம், 2.5, ஒரு கிலோவில் இரும்பு, 115.5 மி.கி., துத்தநாகம், 0.3 மி.கி., மாங்கனீஸ், 1.6 மி.கி., காப்பர், 0.34 மி.கி., உள்ளிட்ட சத்துகள் உள்ளன. அங்கக சத்துகள் உள்ளதால் பயிர் வளர்ச்சி, நல்ல மகசூல் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
09-Jan-2025