தமிழக ஊராட்சி செயலர்சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழக ஊராட்சி செயலர்சங்கம் ஆர்ப்பாட்டம்சேலம்:தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்க, சேலம் மாவட்ட மையம் சார்பில், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிவசங்கர் தலைமை வகித்து பேசியதாவது: சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து, காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்பட்ட பிறகும் ஊராட்சி செயலர்களுக்கு, இதுவரை எந்த அரசு சலுகைகளும் வழங்கப்படவில்லை. அரசாணை: 113ன் படி, 17ஏ, பி போன்று, அரசு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்படும் அனைத்து பணி விதிகளும், ஊராட்சி செயலர்களுக்கும் பொருந்துகிறது. ஆனால் விடுப்பு அனுமதி ஒதுக்கீடு, மருத்துவ விடுப்பு, குடும்ப நல நிதி, ஓய்வூதியம் என, அரசு ஊழியர்களுக்கு எந்த சலுகைகளும் கிடைப்பதில்லை. அரசு திட்டமிட்டு புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்? ஒன்றியத்தில் பணிபுரியும் பதிவறை எழுத்தர்களுக்கான சலுகைகளை, எங்களுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட செயலர் சோலைமுத்து, துணைத்தலைவர் மணிமாறன், அமைப்பு செயலர் மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.