உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் மூட்டை பூச்சி!

அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் மூட்டை பூச்சி!

சேலம்: தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில், மூட்டை பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. தற்போது வழங்கபட்ட புதிய பஸ்களிலும் மூட்டை பூச்சி தொல்லை அதிகரித்துள்ளதால், காசு கொடுத்து கடி வாங்கும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும், விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு தமிழகத்தில், 23 டெப்போக்கள் செயல்படுகின்றன. குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள், அல்ட்ரா டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் என, மொத்தம், 885 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில், 66 பஸ்கள் கடந்த ஜூலை மாதம் பயன்படுத்த முடியாது என ஒதுக்கப்பட்டது.அதை அடுத்து அரசின் சார்பில், 75 புதிய அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் வழங்கப்பட்டது. அரசின் சார்பில் புதிய பஸ்கள் வழங்கப்பட்டாலும், பஸ்களின் இயக்கம் பயணிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 520 அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் வழங்கப்பட்டது. இதில் தற்போது அனைத்து பஸ்களும் பாடாவதி நிலைக்கு வந்து விட்டது. பஸ்களை வழங்கிய அரசு அதனை பராமரிப்பு செய்வதற்கு தேவையான மெக்கானிக்குகளையோ, பராமரிப்புக்கு செலவு தொகைகளை ஒதுக்கீடு செய்யவில்லை.பஸ்கள் அனைத்தும் தற்போது படு மோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்களை முறையாக பராமரிக்காததால், மூட்டை பூச்சி, வண்டுகளின் தொல்லை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க துவங்கி உள்ளது. பஸ்களில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் மூட்டை பூச்சியிடம் கடி வாங்குவதுடன், வீடுகளுக்கும் அவற்றை கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அத்துடன் குழந்தைகள், முதியவர்கள் இந்த பஸ்களில் பயணிக்கும் நிலையில் மூட்டை பூச்சியின் காரணமாக தோல் நோய்க்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் நான்கு வழிச் சாலை, ஆறு வழிச்சாலைகள் பெருகி விட்ட நிலையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் மட்டும் பயணம் நேரம் மட்டும் குறைந்த பாடு இல்லை.சேலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஆம்னி பஸ்கள் , 5 மணி நேரத்தில் பயணிக்கும் நிலையில், விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களின் பயண நேரம், 8 மணி முதல், 10 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கின்றன.டிரைவர்களிடம் டீஸல் சிக்கனத்தையும், கன்ட்ரக்டர்களிடம் வசூலை அதிகரிக்க கோரி டார்ச்சர் செய்யும் அதிகாரிகள், பயணிகளின் நலனை புறந்தள்ளி விடுகின்றனர்.தற்போதைய வழித்தடங்களுக்கு புதிய பஸ்கள் வழங்கப்படும் நிலையில், வழித்தட நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்த வழித்தட நீட்டிப்பால் ஆம்னி பஸ்களே கொள்ளை லாபத்தை தேடி வருகின்றன. இது போன்று தமிழகத்தின் பல இடங்களில் வழித்தட நீட்டிப்பு அரங்கேற்றப்பட்டு, ஆம்னி பஸ்களின் வசூல் வேட்டைக்கு அதிகாரிகள் துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தற்போது அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களை பராமரிப்பதில் நிர்வாகம் போதிய கவனம் செலுத்த வில்லை. இதன் காரணமாக பழைய பஸ்களில் மட்டுமின்றி, புதிய பஸ்களிலும் மூட்டை பூச்சி தொல்லை அதிகரித்துள்ளது.இந்நிலையில் சேலம், திருநெல்வேலி, நாகர்கோவில், சென்னை டெப்போக்களில் தற்போது மூட்டை பூச்சி மருந்து அடிக்கப்பட்டு, பஸ்கள் தார்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணியையும் புகார் வந்தால் மட்டுமே மேற் கொள்ளப்படுகிறது.விரைவு போக்குவரத்துக் கழக அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களின் மூட்டைப் பூச்சி தொல்லையில், இருந்து பயணிகளை காப்பாற்றும் வகையில், மாதம் தோறும் பஸ்களில் மூட்டை பூச்சி, வண்டு ஒழிப்பு பணிகளை முறையாக மேற் கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை