சுதந்திரத்தை சுவாசித்து கொடியேற்றி கொண்டாட்டம்
சேலம், நாடு முழுதும், 79வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. சேலம் காந்தி மைதானத்தில், கலெக்டர் பிருந்தாதேவி, காலை, 9:05 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற அவர், மூவர்ண பலுான்களை பறக்க விட்டார்.சுதந்திரத்துக்கு போராடிய தியாகிகளின் வாரிசுதாரர்கள், 192 பேருக்கு கதராடை அணிவித்து, மரியாதை செலுத்தினார். சிறப்பாக பணியாற்றிய, 96 போலீசார், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள், பணியாளர்கள், வீராங்கனைகள் என, 536 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.வேளாண்மை - உழவர் நலத்துறை, தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மகளிர் திட்டம் உள்பட பல்வேறு துறைகள் சார்பில், 23.71 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட, 5 பேருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பணி ஆணைகளை வழங்கினார்.இதையடுத்து பள்ளி கல்வித்துறை சார்பில், இயற்கை அழகு, போதை மருந்து இல்லாத இந்தியா, நெகிழி விழிப்புணர்வு, பெண் எழுச்சி, தேசபக்தி, பாரதியார் பாடல், அவள் சக்தி போன்ற தலைப்புகளில், 1,527 மாணவ, மாணவியர் மூலம், 35 நிமிடங்கள் நடந்த கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.சேலம் மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் ராமச்சந்திரன் தேசிய கொடியேற்றினார். கமிஷனர் இளங்கோவன் உள்ளிட்ட அலுவலர்கள், துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, தேசிய கொடியேற்றினார். அதேபோல் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட இடங்களில், சுதந்திர காற்றை சுவாசித்து தேசிய கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.