தரைப்பாலத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இடைப்பாடி, சேலம் மாவட்டத்தில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த கனமழையால். சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, செட்டிப்பட்டி அம்மன்கோவில் பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. பாலம் வழியாக அம்மன்கோவில், ஆரையான்காடு, பட்டனத்தான்காடு, புளியம்பட்டி, கல்லம்பாளையம், வடுவச்சிகாடு, குட்டையன்காடு, சுக்கலான்காடு, புதுார் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்த தரைப்பாலம் வழியாக கிராமமக்கள் செட்டிபட்டி சந்தைக்கும், இடைப்பாடி-குமாரபாளையம் மாநில நெடுஞ்சாலைக்கும் சென்று வந்தனர். பாலம் உடைந்ததால், 5 கி.மீ., துாரம் சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி வேன்கள் செல்ல முடியாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், தரைப்பாலம் இருந்த பகுதியில் சேலம் மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலர் ராமமூர்த்தி தலைமையில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு தரைப்பாலம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர், அவர்களாகவே கலைந்து சென்றனர்.