ஏற்காட்டில் 256 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்88 ஆண்டுக்கு பின் ஆங்கிலோ இந்தியன் உள்பட 6 பேர் மீது வழக்கு
சேலம்:ஏற்காட்டில், 256 ஏக்கர் நில ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக, 88 ஆண்டுக்கு பின் ஆங்கிலோ இந்தியன் உள்பட, 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம், கன்னங்குறிச்சி, விநாயகம்பட்டியை சேர்ந்தவர் பிரான்சிஸ் ஜேம்ஸ் ஸ்காட், 70; ஆங்கிலோ இந்தியன். இவர், கடந்த, 10ல் நெத்திமேட்டில் உள்ள எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு:என் தாத்தா ஜான் சார்லஸ் ஸ்காட், பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்தார். அவர் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் குடியிருந்தபோது, பிரிட்டிஷ் அரசிடம், 30 ஆண்டு கால குத்தகை அடிப்படையில், ஏற்காட்டில் உள்ள பில்லேரி, பிலாத்துார், காக்கம்பாடி கிராம பகுதிகளில், 237.72 ஏக்கர், 0.83 சென்ட் நிலங்கள் ஆகியவற்றை, ஆங்கிலேயர்கள் ஜேம்ஸ் ஸ்டேன்ஸ், நார்மன் ஸ்டேன்ஸ் ஆகியோருடன் இணைந்து, காபி தோட்டங்களை உருவாக்கி பராமரித்தனர்.தாத்தா, 1906ல் பில்லேரி, பிலாத்துாரில் உள்ள, 18.42 ஏக்கர் நிலங்களை பொன்னம்மாள் என்பவரிடம் கிரயம் வாங்கி அனுபவித்து வந்தார். 1919ல் தாத்தா, ஏற்காட்டை சேர்ந்த மேரியம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன், என் தந்தை ஜேம்ஸ் ஸ்காட். 1929ல் ஆங்கில அரசாங்கம், அவர்கள் பயன்படுத்திய நிலங்களை, அவர்களுக்கே உரிமையாக்கி ஆணை வெளியிட்டது.இதனால் மேற்படி நிலங்களை, தாத்தா, ஜேம்ஸ் ஸ்டேன்ட்ஸ், நார்மன் ஸ்டேன்ட்ஸ் ஆகியோருக்கு கூட்டுரிமை வழங்கப்பட்டது. முன்னதாக உடனிருந்த இருவருக்கும், நிலத்துக்குரிய தொகையை, தாத்தா வழங்கிவிட்டார். இதுதொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.அதன் விசாரணையின்போது, 1932ல் தாத்தா இறந்துவிட்டார். இவர் கல்லறை, 'பெவர்லே எஸ்டேட்'டில் உள்ளது. தாத்தா இறந்தபின், அவரது சொத்துக்கு அதிகாரப்பூர்வ வாரிசான என் தந்தைக்கு சொத்து கிடைக்கவில்லை. அதற்கு பதில், தந்தை, தாயை மறைத்து, போலியாக என் தாத்தாவின் மனைவி வால்டர் பௌண்சிலி ஸ்காட் என்ற பெண்ணை, வாரிசு என ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது.இதையடுத்து, 1937ல், 256.94 ஏக்கர் சொத்துகளை, வால்டர் பௌண்சிலி ஸ்காட், மோசடி ஆவணங்கள் மூலம், தனியார் காபி நிறுவனத்துக்கு விற்றார். இதற்கு ஜேம்ஸ் ஸ்டேன்ட்ஸ், நார்மன் ஸ்டேன்ட்ஸ் உடந்தை. இச்சொத்தை மலையாண்டி செட்டியார், மாணிக்கம் செட்டியார், குழந்தைவேல் செட்டியார் ஆகியோர், தனியார் எஸ்டேட் பெயருக்கு மாற்றி, அரசு ஆவணங்களை தயாரித்து நிலத்தை அபகரித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஜேம்ஸ் ஸ்டேன்ட்ஸ், நார்மன் ஸ்டேன்ட்ஸ், வால்டர் பௌண்சிலி ஸ்காட், மலையாண்டி செட்டியார், மாணிக்கம் செட்டியார், குழந்தைவேல் செட்டியார் மீது நேற்று வழக்குப்பதிந்தனர். இதன்மூலம், 1937ல் ஆங்கிலேயர் காலத்தில் நடந்த சம்பவத்துக்கு, 88 ஆண்டுகளுக்கு பின் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கில் உள்ளவர்களின் பெயர்கள் குறித்து நேரடியாக விசாரித்து யாரேனும் இறந்திருந்தால், உயர் அதிகாரிகள் அறிவுரைப்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.