ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையை ஒடுக்கும் அரசு *ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
திருப்பூர்:''ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகளையும், ஆன்மிக விழாக்களையும் தமிழக அரசு ஒடுக்கி வருகிறது,'' என்று ஹிந்து முன்னணி குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:ஹிந்துக்களின் நியாயமான வழிபாட்டு உரிமைகளையும், ஆன்மிக விழாக்களையும் ஒடுக்குவதில் சட்டத்துக்கு புறம்பான அனைத்து வழிமுறைகளையும் தமிழக அரசு பின்பற்றி வருகிறது. திண்டுக்கல்லில் ஸ்ரீ அபிராமி அம்மன் பக்தர்கள் குழு அறக்கட்டளை சார்பில், அனைத்து சமுதாய இயக்கங்களும் ஒன்றிணைந்து, வரும் ஏப்., 27ம் தேதி அன்னை அபிராமி புகழ் பரப்ப ஆன்மிக மாநாடு நடத்த உள்ளனர். அதில், மஹாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன், மடாதிபதிகள், துறவியர் ஆன்மிக உரை நிகழ்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. யாக வேள்விகளும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளும் நடைபெறும் என தெரிவித்திருந்தனர். இதற்காக திண்டுக்கல் நகரில் பல இடங்களில் இதுதொடர்பான விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. இந்த சுவர் விளம்பரங்களை இரவில் யாருக்கும் தெரியாமல் போலீசார் அழித்துள்ளனர். ஹிந்துக்களின் சாதாரணமான அன்றாட நிகழ்வுகளை கூட போலீஸ்துறையை கொண்டு தடுத்து நிறுத்துவதும், ஒடுக்குவதும் தமிழகத்தில் தினம் தினம் அரங்கேறி வருகிறது. ஹிந்துக்கள் ஆன்மிக மாநாடு நடத்துவதில், இந்த அரசு என்ன குறை கண்டது? ஏன், ஹிந்துக்களின் மீது இத்தனை வன்மம்? ஹிந்துக்களுக்கு எதிரான அடக்கு முறையை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அனைத்து சமுதாயத்தையும் ஒன்று திரட்டி, மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடாது, என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற காரியங்கள் வாயிலாக, தமிழகத்தில் ஏற்பட்டு வரும் ஹிந்து எழுச்சியையும், ஒற்றுமையையும் யாராலும் தடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.