உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓடையில் மருத்துவ, இறைச்சி கழிவால் துர்நாற்றம் நாய்கள் உலாவால் மக்கள் அச்சம்

ஓடையில் மருத்துவ, இறைச்சி கழிவால் துர்நாற்றம் நாய்கள் உலாவால் மக்கள் அச்சம்

பனமரத்துப்பட்டி:ஏரி உபரிநீர் ஓடையில் மருத்துவம், இறைச்சி கழிவு மூட்டைகளாக கட்டி வீசப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த கழிவை சாப்பிட, நாய்கள் கூட்டமாக, 'உலா' வருவதால், அந்த வழியே செல்லவே மக்கள் அச்சப்படும் அவலம் உள்ளது.சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, பள்ளிதெருப்பட்டி ஊராட்சி களரம்பட்டி அருகே, 3 சாலைகள் சந்திக்கின்றன. அதில் பனமரத்துப்பட்டி - மல்லுார் சாலையில் பனமரத்துப்பட்டி ஏரி உபரிநீர் ஓடை, குப்பை கிடங்கு, மயானம் உள்ளன. ஓடையில் மூட்டை, மூட்டையாக கோழி, மீன், இறைச்சி கழிவை, சில்லி சிக்கன் கடைக்காரர்கள் கொட்டி வருகின்றனர். தவிர ஓடை மீது கட்டப்பட்டுள்ள பாலத்தின் அடியில் மருத்துவ கழிவை, மூட்டைகளாக கட்டி வீசி வருகின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.களரம்பட்டி விவசாயி வி.சுரேஷ்குமார், 40, கூறுகையில், ''ஓடையில் வீசப்படும் கழிவால், ஏராளமான நாய்கள் அங்கு சுற்றுகின்றன. கழிவை, அருகே உள்ள வயலுக்கு இழுத்துச்சென்று நாய்கள் சண்டையிட்டபடி விளையாடுவதால் பயிர்கள் நாசமடைகின்றன. கோழி குடல் உள்ளிட்டவை விழுங்க பாம்புகளும் உலா வருகின்றன,'' என்றார்.ச.ஆ.பெரமனுார் பி.செல்வராஜ், 55, கூறுகையில், ''ஓடை கழிவால் நாற்றத்தை தாங்க முடியாமல், மூக்கை பிடித்தபடி செல்லும் நிலை உள்ளது. மேலும் அங்குள்ள நாய்கள் கடிக்கின்றன. 3 சாலை சந்திப்பில் இரவில் விளக்கு வெளிச்சமும் இல்லை. இதனால் நாய்கள் குறுக்கே ஓடி வருவதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்,'' என்றார்.பள்ளிதெருப்பட்டி, வாத்திக்காடு விவசாயி எஸ்.பன்னீர்செல்வம், 46, கூறுகையில், ''நாய் தொல்லையால் ஆடு, மாடு கூட மேய்க்க முடியவில்லை. மாலையில் டியூசன் முடிந்து வீடு திரும்பும் மாணவியர் நாய்க்கடிக்கு ஆளாகின்றனர். இறைச்சி, மருத்துவ கழிவை, வீடுகள், விவசாய வயலில் இழுத்து வந்து போடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது,'' என்றார்.இதுகுறித்து பள்ளிதெருப்பட்டி ஊராட்சி செயலர் செந்தில்குமார் கூறுகையில், ''மருத்துவ, இறைச்சி கழிவு கொட்டக்கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கப்படும். மீறி கொட்டினால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை