2ம் நாளும் மாணவ, மாணவியர், பெற்றோர் ஆர்வம்காலைக்கதிர் நடத்திய கல்வி வழிகாட்டி நிறைவு
சேலம்:சேலத்தில் நடந்த, 'காலைக்கதிர் கல்வி வழிகாட்டி' 2ம் நாளான நேற்றும், ஏராளமான மாணவ, மாணவியர், பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்ற நிலையில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, 'காலைக்கதிர்' சார்பில், 'கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சி, சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. காலைக்கதிர் நாளிதழுடன், கோவை ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிடியூசன்ஸ் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியின், இரண்டாம் நாளான நேற்றும், காலை, மதியம் என, இரு வேளையும் நடந்த கருத்தரங்குகளில், திரளான மாணவ, மாணவியர், பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.காலை அமர்வில், 'சி.ஏ., மற்றும் வணிகவியல் படிப்புகள்' குறித்து ஆடிட்டர் அருண்; 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' என, ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு; 'தேசிய அளவில் நுழைவுத்தேர்வுகள் மற்றும் உதவித்தொகைகள்' தலைப்பில், கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் பேசினர்.மதிய அமர்வில், 'மருத்துவம் சார்ந்த படிப்புகள்' குறித்து, கல்வி ஆலோசகர் அசோக்குமார், 'கோர் இன்ஜினியரிங்' குறித்து, ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி துணை முதல்வர் கருப்புசுவாமி; 'நீட், ஐ.ஐ.டி., தேர்வுகளில் சாதிக்க டிப்ஸ்' குறித்து, கல்வி ஆலோசகர் அஸ்வின், 'வேளாண் துறை சார்ந்த படிப்புகள்' குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர் சுதாகர் பேசினர். தொடர்ந்து கேள்வி நேரத்தில் மாணவ, மாணவியர், பெற்றோர், பல்வேறு சந்தேகங்களை, நிபுணர்களிடம் கேட்டு தெளிவு பெற்றனர். கருத்தரங்கின் இடையே கேட்கப்பட்ட, பொது அறிவு வினாக்களுக்கு சரியாக பதில் அளித்த, 10 பேருக்கு ஸ்மார்ட் வாட்ச், ஒருவருக்கு டேப், ஒருவருக்கு சிறப்பு பரிசாக லேப்டாப் வழங்கப்பட்டது.கல்வி வழிகாட்டி கண்காட்சியில், தமிழகத்தின் முன்னணி கல்லுாரிகள் அமைத்த, 40க்கும் மேற்பட்ட ஸ்டால்களில், விபரங்கள், கையேடுகள் பெற்றுக்கொண்டு, கட்டண விபரம் உள்ளிட்டவற்றையும், மாணவ, மாணவியர், பெற்றோர் கேட்டு தெரிந்து கொண்டனர். அனைத்து ஸ்டால்களிலும் மாணவர்களின் கூட்டத்தை காண முடிந்தது. இந்நிகழ்ச்சிக்கு, 'பவர்டு பை' பங்களிப்பாளர்களாக, கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா விஸ்வ வித்யாபீடம்; 'கோ ஸ்பான்சராக' கற்பகம் இன்ஸ்டிடியூசன்ஸ், இந்திய பட்டய கணக்காளர் சங்கம் ஆகியவை இணைந்திருந்தன.பரிசு பெற்ற மாணவர்கள்காலை அமர்வில், நாமக்கல் பிரமோரதன், 'டேப்' பரிசாக பெற்றார். சேலம் கிரிஜா, மேட்டூர் ஸ்ரீவிகாஸ், நாமக்கல் கிேஷார், சேலம் கார்த்திக் பாலா, சேலம் தீபக்குமார், ஸ்மார்ட் வாட்ச்களை பரிசாக பெற்றனர்.மதிய அமர்வில், சேலம் கவிவர்ஷினி லேப்டாப், சேலம் கிரிதரன் டேப் பரிசாக பெற்றனர். ராசிபுரம் ஷன்மதி, தர்மபுரி சுபிகா, சேலம் தர்ஷனாஸ்ரீ, மேட்டூர் அரவிந்த் கார்த்திக், மேட்டூர் சுதர்ஷன், ஸ்மார்ட் வாட்ச்களை பரிசாக பெற்றனர்.நன்றி... நன்றி...பிளஸ் 2 மாணவர்கள் நலனுக்கு நடத்தப்படும், 'காலைக்கதிர் கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சியை, சிறப்பாக நடத்த உதவியாக இருந்த, ஸ்பான்சர்ஸ், அனுமதி வழங்கிய, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, போலீஸ், தீயணைப்பு துறை அலுவலர்கள், அக்கறையுடன் மாணவர்களை அழைத்து வந்த பெற்றோருக்கு, காலைக்கதிர் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.'தேவை அதிகம் உள்ள படிப்பு சி.ஏ.,''சி.ஏ., மற்றும் வணிகவியல் படிப்புகள்' குறித்து, ஆடிட்டர் அருண் பேசியதாவது:பிளஸ் 2 வகுப்பில் வணிகவியல் மட்டுமல்ல. எந்த குரூப் எடுத்து படித்தாலும், சி.ஏ., படிக்க முடியும். பிளஸ் 2 முடித்து விட்டு நேரடியாகவும், சி.ஏ., படிக்கலாம் அல்லது டிகிரி முடித்துவிட்டும் தயாராகலாம். பவுண்டேஷன், இன்டர்மீடியட், பைனல் என, 3 நிலைகளில் தேர்வு எழுத வேண்டியிருக்கும். படிக்க தேவையான புத்தகம், பயிற்சி என, மொத்தம், 1 லட்சம் ரூபாயை தாண்டாது. ஆனால் ஆடிட்டரிடம் பயிற்சியாளராக இருக்கும்போது, அதைவிட அதிக உதவித்தொகை கிடைத்துவிடும்.நம் நாட்டில் இதுவரை, சி.ஏ., முடித்தோர், 4 லட்சம் பேர். அதில், 1.50 லட்சம் பேர் தனியே பயிற்சி செய்கின்றனர். மற்றவர்கள் வெளிநாட்டு, நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும்போது, 10 முதல், 12 லட்சம் ஆடிட்டர்கள் தேவைப்படுவர். அதிகபட்சமாகவே ஆண்டுக்கு, 25,000 பேர்தான் சி.ஏ., தேர்ச்சி பெறுகின்றனர். தேவை அதிகம் உள்ள படிப்பாக, சி.ஏ., உள்ளது. தேர்ச்சி பெற்றுவிட்டால் ஓய்வு என்பது கிடையாது. கடைசி நாள் வரை பயிற்சி செய்ய முடியும். இன்று அனைத்து தகவல்களும், உள்ளங்கையில் கிடைக்கும் சூழலில், அதை எப்படி பயன்படுத்துவது என தெரிந்து கொண்டால் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.'அப்டேட் இல்லாவிட்டால் பின்னடைவு''தேசிய அளவில் நுழைவுத்தேர்வுகள் மற்றும் உதவித்தொகைகள்' தலைப்பில், கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் பேசியதாவது:இன்று தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக உள்ளது. என்ன மாறுதல் வருகிறதோ, அதை கற்றுக்கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் பின்னடைவு தான் ஏற்படும். மிகப்பெரிய நிறுவனங்களில் கூட, பல ஆயிரம் பணியாளர்களை வெளியேற்றுகின்றனர். அதற்கு காரணம், அவர்கள் தொழில்நுட்பத்தில், 'அப்டேட்' ஆகாமல் இருப்பதுதான்.இந்தியா இளைஞர்கள் மிகுந்த நாடு. எல்லோரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் என லட்சத்தில் போட்டியிட்டு காணாமல் போகின்றனர். அரசு நிறுவனங்களான, ஐ.ஐ.டி., உள்ளிட்டவற்றில், 'கெமிக்கல்' படித்தவர்களும், மிகப்பெரிய உச்சத்தை அடைகின்றனர். நம் நாட்டில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மட்டும், 80க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் உள்ளன. அவற்றின் மூலம், நாட்டின் உயர்ந்த அரசு நிறுவனங்களில் சேர முடியும். அதுகுறித்த விழிப்புணர்வு கூட இல்லை.'இது படிப்பதில் தான் ஆர்வம்' என, குறுகிய வட்டத்தில் நின்று விடாமல், 'எதை படித்தாலும் சிறப்பாக படிப்பேன்' என, உறுதியாக நின்றால் வளமான எதிர்காலம் கிடைக்கும். நுழைவுத்தேர்வு எழுதுவது மட்டுமின்றி, அதில், 'சாய்ஸ் பில்லிங்' செய்வது அதை விட முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.'பிராப்ளம் சால்விங் திறன் முக்கியம்''நீட் மற்றும் ஐ.ஐ.டி., தேர்வுகளில் சாதிக்க டிப்ஸ்' வழங்கி, கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது:போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற, 'பிராப்ளம் சால்விங்' திறன் முக்கியம். சின்ன பிராப்ளத்தை சால்வ் செய்ய முடியும் என்றால் குறைந்த சம்பளம். பெரிய பிராப்ளத்தை சால்வ் செய்தால் அதிக சம்பளம். இதில் முதலாவது ஆப்டிடியூட். 6 முதல், 10 வரையான கணக்கு பாடத்தில் இருந்து கேட்கப்படும் வினாக்கள். இரண்டாவது லாஜிக்கல் திங்கிங், மூன்றாவது கம்யூனிகேசன். இவை மூன்றையும் வளர்த்துக்கொண்டால், போட்டித்தேர்வு மட்டுமல்ல, நல்ல வேலைவாய்ப்பையும் பெற முடியும்.வகுப்பறையில் கவனித்து, வீட்டுக்கு சென்று, 4 மணி நேரம் வரை படிக்க வேண்டும். அப்போதுதான், ஜே.இ.இ., தேர்வுகளில் வெற்றி பெற்று, ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியும். நாட்டில் உள்ள, 21 ஐ.ஐ.டி.,க்களில், 61 சதவீத இடங்களை, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, உ.பி., டில்லி மாநில மாணவர்கள் பிடிக்கின்றனர். அவர்கள் வெற்றிக்கு காரணம், அங்கு ஹிந்தியில் பாடம் நடத்துகின்றனர். இங்கு தமிழில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை. அதனால், ஐ.ஐ.டி., செல்லும் மாணவர் எண்ணிக்கையில் தமிழகம் பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு, 545 மாணவர்கள்தான் ஐ.ஐ.டி., சென்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.'சாதிக்கும் வேளாண் மாணவர்கள்''வேளாண் துறை படிப்புகள்' குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர் சுதாகர் பேசியதாவது:மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதேநேரம் உணவு பொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சமூக உயர்வுக்கானதாக, வேளாண் படிப்புகள் உள்ளன.வேளாண் பல்கலையில், 14 படிப்புகள் வழங்கப்படுகின்றன. பி.எஸ்சி., வேளாண், தோட்டக்கலை, வனம், உணவு அறிவியல் படிப்புகளுக்கு, அரசு வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பயோடெக், பயோ இன்பர்மேட்டிக்ஸ் படிப்புகளை தேர்வு செய்து, அதில் ஆராய்ச்சி வரை செல்ல வேண்டும். பட்டு வளர்ப்பு, வேளாண் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் ஆகியவை படித்தால், எம்.பி.ஏ., கூடுதலாக படிக்க வேண்டும். 4 இன்ஜினியரிங் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.வேளாண் படித்த மாணவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் எளிதில் சாதிக்கின்றனர். அதற்கேற்ப அதன் பாடத்திட்டம் அமைந்துள்ளது. வங்கி, தமிழக அரசு வேளாண் துறை, தேசிய விதை கழகம் உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. தொழில் முனைவோராகவும், பலவித மானிய கடன்கள் வழங்கப்படுகின்றன. இதில் சேர விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.'கோர் படிப்புகளுக்கு ஒரே மாதிரி வளர்ச்சி''கோர் இன்ஜினியரிங்' குறித்து, கோவை, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி துணை முதல்வர் கருப்புசுவாமி பேசியதாவது:ஏ.ஐ., டேட்டா சயின்ஸ் ஆகியவற்றின் தாக்கம் அனைத்து துறைகளிலும் உள்ளது. கோர் இன்ஜினியரிங் படிப்புகளான சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என எதை படித்தாலும், அதில் ஏ.ஐ., சாப்ட்வேர் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பல தொழிற்சாலைகளில் ஆட்களே இல்லாமல் இயங்கும் நிலை உருவாகிவிட்டது. ஆனாலும், ஐ.டி., ஏற்ற இறக்கம் உள்ள துறையாகத்தான் உள்ளது. ஆனால் கோர் படிப்புகளுக்கு, எப்போதும் ஒரே மாதிரி வளர்ச்சி, தேவை இருந்து வருகிறது. கோர் இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு, கேட் தேர்வு, அரசு வேலைவாய்ப்பு என பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.'புதுமை சிந்தனைகளை மெருகேற்றுவது அவசியம்' 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' தலைப்பில், ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு பேசியதாவது: ராணுவ விஞ்ஞானியாக, இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. எம்.பி.பி.எஸ்., கால்நடை மருத்துவம், கணிதம், அறிவியல் பாடங்கள் என, எதை படித்திருந்தாலும் விஞ்ஞானியாக மாற முடியும். இளநிலை படிப்பை முடித்த பின், 'கேட்' தேர்வில் தேர்ச்சி பெற்று, 'செட்' தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால், நேர்காணல் மூலம், விஞ்ஞானியாக தேர்வு செய்வர். பின் புனேவில் உள்ள ராணுவ பல்கலையில் பயிற்சி அளிக்கப்படும். தலைசிறந்த, நீங்கள் வியக்கும் ஆளுமைகளும், தலைவர்களும் உங்களுடன் பேசுவர். இதற்கு வெறித்தனமாக படித்தால் மட்டும் போதும். படிப்பதோடு, புதுமை சிந்தனைகளை உருவாக்கவும், அவற்றை செயல்படுத்தவும் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். பணமோ, கட்டணமோ உங்களுக்கு தடையாக இருக்காது. பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் வளர்ந் தால் மட்டும் ஒரு நாடு வல்லரசாகாது. அறிவியல் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்று அதன் மூலம் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடையும் நாட்டையே வல்லரசு என்கின்றனர். நம் நாட்டை வல்லரசாக்க, ஏராளமான விஞ்ஞானிகள் உழைத்து வருகின்றனர். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் வெற்றி பெற வேண்டுமானால், படிப்பு, புதுமை சிந்தனைகள் என, உங்களை மெருகேற்றிக்கொள்வது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.'எப்போதும் தேவை குறையாத நர்சிங்''மருத்துவம் சார்ந்த படிப்புகள்' குறித்து, கல்வி ஆலோசகர் அசோக்குமார் பேசியதாவது: பிளஸ் 2 முடித்து உயர் கல்வியில் சேர, நீங்கள் எடுக்கும் முடிவு, உங்களின் அடுத்த, 50 ஆண்டுகளை தீர்மானிக்கும். அதனால் முடிந்தவரை, 10ம் வகுப்பு படிக்கும் போதே, உயர் கல்வித்துறையை தேர்வு செய்துவிட வேண்டும். இந்த ஆண்டு, அரசு கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., சேர, 'நீட்' தேர்வில், 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வேண்டியிருக்கும். பி.எஸ்சி., நர்சிங் எப்போதுமே தேவை குறைவதில்லை. தனியார் கல்லுாரிகளில் படிக்க ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கும். அலைடு ஹெல்த் படிப்புகளாக, பி.எஸ்சி.,யில், 15 வித படிப்புகள் உள்ளன. அவரவர் விருப்பத்துக்கேற்ப, மருத்துவ டெக்னீஷியனாக தேர்வு செய்யலாம். கால்நடை மருத்துவம், பிசியோதெரபி படிப்புகளில், நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. பயோமெடிக்கல், மைக்ரோ பயாலஜி ஆகியவை எடுத்து படித்தால், முதுகலை படிக்க தயாராக இருக்க வேண்டும். இதில் இளநிலை மட்டும் படித்துவிட்டு, 70 சதவீதம் பேர், ஐ.டி., துறைக்கு, வேலைக்கு செல்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.