தமிழகத்துக்கு நடப்பாண்டில் இதுவரை 24.21 கோடி சுற்றுலா பயணியர் வருகை
சேலம்:''தமிழகத்துக்கு நடப்பாண்டில் ஆக., வரை, 24.21 கோடி சுற்றுலா பயணியர் வந்துள்ளனர்,'' என, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.உலக சுற்றுலா தினத்தை ஒட்டி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். அதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஏற்காடு, அடிவாரத்தில் வனத்துறை சோதனைச்சாவடியில், சுற்றுலா பயணியருக்கு மரக்கன்று, மஞ்சப்பை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது:சுற்றுலாத்துறையை மேம்படுத்த, 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சர்வதேச அடிப்படையில் பல்வேறு வசதிகள், தமிழகம் முழுதும் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு நடப்பாண்டில் ஆகஸ்ட் வரை, 24.21 கோடி சுற்றுலா பயணியர் வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட, எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலாத்துறையில் முதலீட்டாளர்களை ஈர்க்க, சென்னையில் சுற்றுலாத்துறை மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்வில் தி.மு.க., சேலம் எம்.பி., செல்வகணபதி, மேயர் ராமச்சந்திரன், டி.ஆர்.ஓ., ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.