உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கடந்த 8 மாதங்களில் ரயிலில் கடத்திய 326 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது

கடந்த 8 மாதங்களில் ரயிலில் கடத்திய 326 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது

சேலம் : சேலம் ரயில்வே போலீசார் கடந்த, 8 மாதங்களில் ரயிலில் கடத்திய, 326 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனர். கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்துவதை தடுக்க, போலீசார் பல்வேறு சோதனைகளை நடத்தி கைது செய்து அவர்களிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால் தொடர்ந்து கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒடிசா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கஞ்சாவை சட்ட விரோதமாக பஸ், ரயில்களில் கடத்தி கேரளாவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது தொடர் கதையாக உள்ளது.ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக கேரளா செல்லும் ரயில்களில், கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே எஸ்.பி., ஈஸ்வரன், டி.எஸ்.பி., லட்சுமணன் ஆகியோர் ரயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் ஆர்.பி.எப். போலீசார், குற்றப்பிரிவு போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு, ரயில்களில் கஞ்சா கடத்தும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ஒடிசா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி கேரளா கொண்டு செல்வதை தடுக்க சேலம் வழியாக கேரளா செல்லும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமையில், எஸ்.ஐ., அய்யாதுரை உள்ளிட்ட போலீசார், 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா கடத்துபவர்கள், போலீசாரின் சோதனையை கண்டதும் கஞ்சா பண்டல்களை ரயில்களிலேயே விட்டு செல்வதும், சிலர் கைது செய்யப்படுவதும் தொடர்கிறது.கடந்த, 8 மாதத்தில் சேலம் வழியாக கேரளாவிற்கு கடத்திய, 326 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து இதுவரை, 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் ரயில்களில் கஞ்சாவை போட்டு விட்டு தப்பி சென்று விடுகின்றனர். அதிகளவில் முன்பதிவில்லா பெட்டியில் பயணிக்கும் இவர்கள், கழிவறை அருகே கஞ்சா பேக்கை போட்டு விட்டு செல்வது நடந்து வருகிறது. தப்பித்த நபர்கள் யாரையும், போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். தப்பிச் செல்லும் நபர்களே, மீண்டும் மீண்டும் இந்த கடத்தலில் ஈடுபட்டு வருவதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.இது குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், 'சேலம் வழியாக செல்லும் ரயில்களில், 24 மணி நேரமும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வாறு சோதனை செய்தபோதும், கஞ்சா கடத்தலில் ஈடுபடும் ஒரு சிலரை மட்டுமே கைது செய்ய முடிகிறது. மற்றவர்கள் கஞ்சாவை ரயிலில் போட்டு விட்டு தப்பி விடுகின்றனர். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், வட மாநிலத்தை சேர்ந்தவர்களா அல்லது கேரளாவை சேர்ந்தவர்களா என கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது. இனி வரும் காலங்களில் சோதனையை தீவிரப்படுத்தி, சாதாரண உடையில் போலீசார் சோதனையில் ஈடுபடுத்தி, கஞ்சா கடத்தும் கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பெட்டிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ