கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 450 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
சேலம் : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சேலம் கோட்டத்தில், 450 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் அறிக்கை:கார்த்திகை தீபம், பவுர்ணமியை முன்னிட்டு, டிச., 12(நாளை) முதல், 16 வரை, 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கு பஸ்கள் இயக்கப்படும். அதேபோல் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு; பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர்; ஓசூரில் இருந்து சேலம், சென்னை, புதுச்சேரி, கடலுார், திருச்சி, மதுரை, கோவை; நாமக்கல்லில் இருந்து சென்னை; திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு; ஈரோட்டில் இருந்து பெங்களூரு; திருச்சியில் இருந்து ஓசூர் உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும்.சேலம், தர்மபுரி, ஓசூர் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து, டிச., 12 மதியம், 2:00 முதல், டிச., 14 மதியம், 2:00 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம் திருவண்ணாமலைக்கு இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.