ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனைமேட்டூர், :மேட்டூரில், ஆட்டோ டிரைவரை வெட்டி கொலை செய்த வழக்கில், ஆறு பேருக்கு நேற்று இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.சேலம் மாவட்டம், மேட்டூர் வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ரஞ்சித்குமார், 38. இவருக்கும், மேட்டூர், பிள்ளையார் கோவில் வீதி ராமமூர்த்தி, 44, முனியப்பன் கோவில் தெரு சுரேஷ்குமார், 35, சேலம்கேம்ப், மேஸ்திரி குடியிருப்பு பாலாஜி, 34, காவேரிபாலம் மீனவர்கள் சிவகுமார், 34, முருகன், 34, எம்.டி.சி., தியேட்டர் வீதி தினேஷ், 31, ஆகியோர் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.கடந்த, 2015 செப்.,1ல், மேட்டூர் கிழக்கு பிரதான சாலை, சரவணா கிரில் ஒர்க்ஸ் அருகே முன்விரோதம் காரணமாக ரஞ்சித்குமாரை, ஆறு பேர் கொண்ட கும்பல் கண்ணில் மிளகாய் பொடியை துாவி, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக, ஆறு பேரையும் மேட்டூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஜாமினில் வெளிவந்த அவர்கள், வழக்கு விசாரணைக்காக அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். இந்நிலையில் வழக்கு நேற்று மேட்டூர் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உதயவேலவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கொலை செய்த ஆறு பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை, இரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.தண்டனை விதிக்கப்பட்ட, ஆறு பேரையும் மேட்டூர் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்புடன், சேலம் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.