நடிகர் விஜய் கட்சியில் அ.திமு.க.,வினர் சேர வேண்டாம்; மாஜி அமைச்சர் பேச்சு
நடிகர் விஜய் கட்சியில் அ.திமு.க.,வினர்சேர வேண்டாம்; மாஜி அமைச்சர் பேச்சுபெ.நா.பாளையம், செப். 28-''நடிகர் விஜய் கட்சியில், அ.தி.மு.க.,வினர் யாரும் சேர வேண்டாம் என,'' அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் அன்பழகன் பேசினார்.சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், நேற்று செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து பேசினார். முன்னாள் அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:லோக்சபா தேர்தலில், தி.மு.க., பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றது. இ.பி.எஸ்., நிர்வாகத்திறமையை கண்டு, மாற்று கட்சிகளில் இருந்து பலர், அ.தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், சொத்து, தொழில் வரி மற்றும் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.நடிகர் சிவாஜி கட்சி துவங்கி கலைத்துவிட்டார். கமல் துவங்கிய கட்சி எங்கே உள்ளது என்று தெரியும். அதேபோல், நடிகர் விஜய் கட்சி துவங்கியுள்ளார். அ.தி.மு.க.,வினர், குடும்பத்தினர், விஜய் உள்ளிட்ட புதிய கட்சிகளில் யாரும் சேர வேண்டாம். அ.தி.மு.க.,வில் மட்டும் தான் தொண்டருக்கு பதவி கிடைக்கும். மற்ற கட்சிகளில் அவ்வாறு இல்லை. 17 லட்சம் உறுப்பினருடன், எம்.ஜி.ஆர்., துவங்கிய அ.தி.மு.க.,வை, இ.பி.எஸ்., 2.15 கோடி உறுப்பினராக மாற்றியமைத்துள்ளார்.லோக்சபா தேர்தலில் வேறு ஏதேனும் கட்சி வந்திருந்தால், 25 தொகுதியில் வெற்றி பெற்றிருப்போம். தர்மபுரியில் ஜாதி தலைவரின் மனைவி நின்றதால், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு சதவீதம் குறைந்தது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தே.மு.தி.க., ஓட்டுகள் மட்டுமே பெற்றோம். அனுதாபம், ஆதரவு ஓட்டுகள் கிடைக்காததால் தோல்வியடைந்தோம். இந்த நிலையை, வரும் சட்டசபை தேர்தலில் மாற்றவேண்டும்.இவ்வாறு பேசினார்.எம்.எல்.ஏ.,க்கள் ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.