தானியங்கி சொட்டு நீர் பாசன அமைப்பு பயன்படுத்த அறிவுரை
வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை: சொட்டு நீர் பாசன அமைப்புகளை விட தானியங்கி சொட்டு நீர் பாசன அமைப்பு, விவசாயிகளுக்கு மிகுந்த பயன் தரும். இதில் நேர காப்பகம், உணரிகள், கணினி இணைப்பு ஆகிய வசதிகள் உள்ளதால் குறைந்த மனித சக்தியில் நீர் பாசனம் செய்ய முடியும்.இவை உணரிகளின் உதவியுடன் மண்ணின் ஈரப்பதத்தை நிமிடத்துக்கு நிமிடம் கண்காணித்து கணினிக்கு அனுப்பும். இந்த தரவுகளை கொண்டு ஈரப்பதம் குறையும்போது சொலினாய்டு வால்வு மூலம் தானியங்கி முறையில் செயல்பட்டு பயிர்களுக்கு தேவையான அளவு மட்டும் நீர் பாசனம் அளிக்கும். இதன் செயல்பாடுகளை ஆன்ட்ராய்டு மொபைல் போன் மூலம் எளிதில் கண்காணிக்க முடியும்.பழைய சொட்டு நீர் பாசன அமைப்பை தானியங்கி அமைப்பாக மாற்றிக்கொள்ள முடியும். இதனால் மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப துல்லிய நீர் பாசனம் செய்து தண்ணீரை சேமிக்க முடியும். மேலும் இடுபொருட்களின் பயன்பாடு திறன் அதிகரிக்கும். தேவையான நீர், ஊட்டச்சத்துகள் சரியான நேரத்தில் கிடைப்பதால் மகசூல் அதிகரிக்கும். அதனால் விவசாயிகள், தானியங்கி சொட்டு நீர் பாசன அமைப்புகளை பயன்படுத்தி கூடுதல் லாபம் பெறலாம்.