நகராட்சி அலுவலர்கள் பற்றாக்குறை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா
மேட்டூர், அலுவலர்கள் பற்றாக்குறையால், அடிப்படை பணி பாதிப்பதாக கூறி, நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், தர்ணாவில் ஈடுபட்டனர்.மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் கூட்டம், அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி சந்திரா தலைமை வகித்தார். அதில், தி.மு.க.,வில், 16 பேர், அ.தி.மு.க.,வில், 3 பேர் என, 19 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.பெரும்பாலான கவுன்சிலர்கள் கூறியதாவது:நகராட்சியில் கமிஷனர் முதல் உதவியாளர் வரை ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. தலைமை இல்லாததால் வார்டுகளில் மக்கள் கூறும் குறைகளை யாரிடம் சொல்லி நிவர்த்தி செய்வது என தெரியவில்லை.பெரும்பாலான வார்டுகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. கட்டுமானப்பணி அனுமதிக்கு சென்றால் சம்பந்தபட்ட பிரிவு அலுவலர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து, நகராட்சி அலுவலர்கள் பற்றாக்குறையால், வார்டுகளில் அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, 5, 11, 24வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் லாவண்யா, செல்வராணி, கலா, கூட்டத்தில் இருந்து வெளியேறினர். பின் நகராட்சியை கண்டித்து, அதன் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறுகையில், 'கமிஷனர், பொறியாளர், மேலாளர் பணியிடம் காலியாக உள்ளது. அதற்கு பதில் நியமிக்கப்பட்ட திருச்செங்கோடு கமிஷனர் வாசுதேவன், ஆத்துார் நகராட்சி பொறியாளர் சுப்ரமணியன், எப்போது அலுவலகம் வருகின்றனர், திரும்பிச்செல்கின்றனர் என தெரியவில்லை. காலி பணியிடங்களை நிரப்பி மக்களுக்குரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றனர். இதையடுத்து கூட்டம் முடிந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.