234 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க., தான் வெற்றி பெறும்
ஆத்துார்:அ.தி.மு.க., சார்பில், ஆத்துார் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக்கூட்டம், உடையார்பாளையத்தில், நேற்று முன்தினம் நடந்தது. ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமை வகித்தார். அதில், கரூரில் இறந்த, 41 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க.,வை வெற்றி பெறச்செய்யும்படி, தகவல் தொழில்நுட்ப பிரிவினர், தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும். ஆத்துார் தொகுதியில், 15 ஆண்டாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தான் உள்ளனர். வரும் தேர்தலிலும், தி.மு.க.,வை விரட்டியடிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும், அ.தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று, இ.பி.எஸ்., முதல்வராக வந்ததும், தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். சேலம் மாவட்டத்துக்கு எத்தனை பொறுப்பு அமைச்சர்கள் வந்தாலும், அ.தி.மு.க., 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.நகர செயலர்களான, ஆத்துார் மோகன், நரசிங்கபுரம் மணிவண்ணன், ஒன்றிய செயலர் சேகர், கவுன்சிலர் கோபி உள்பட பலர் பங்கேற்றனர்.