ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, அப்பகுதியினர் கடந்த அக்டோபரில், கலெக்டர் பிருந்தாதேவியிடம் மனு அளித்தனர். இதனால் வருவாய்த்துறையினர், சில நாட்களுக்கு முன் ஓடை ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்தனர்.அதில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, கெங்கவல்லி ஒன்றிய கவுன்சிலர் உமாராணி உள்பட, 7 பேர் ஆக்கிரமித்து, கொட்டகை, பயிர் சாகுபடி செய்திருந்தது தெரிந்தது. அவர்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கிய நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை. இதனால் நேற்று, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது, கவுன்சிலர் உமாராணி எதிர்ப்பு தெரிவித்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார், மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவர் உடல் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். தொடர்ந்து கொட்டகை உள்ளிட்டவற்றை அகற்றி, 82 சென்ட் நிலத்தை மீட்டனர். அங்கு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, தாசில்தார் எச்சரித்தார்.