குடும்பத்தினரை அரிவாளால் வெட்டிய ஆட்டோ டிரைவர் மகன், மூத்த மகள் பலி; மனைவி, இளைய மகள் சீரியஸ்
ஆத்துார்,:கள்ளத்தொடர்பு குறித்து மனைவி தட்டிக்கேட்டதில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், அரிவாளால், மனைவி, மகன், இரு மகள்களை வெட்டினார். இதில் மகன், மூத்த மகள் உயிரிழந்தனர்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே, 74. கிருஷ்ணாபுரம், காந்தி நகரை சேர்ந்தவர் அசோக்குமார், 45, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தவமணி, 38. இவர்களது மகள்கள் விஜயதாரணி, 13, அருள்பிரகாஷினி, 10, மகன் அருள்பிரகாஷ், 6.அசோக்குமார், கடலுார் மாவட்டம் நெய்வேலியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று முன்தினம் சொந்த ஊர் வந்திருந்தார். அப்போது, நெய்வேலியில் வேறு பெண்ணுடன் அசோக்குமார் கள்ளத்தொடர்பு வைத்துள்ளது குறித்து, தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று அதிகாலை, வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த மனைவி, மகன், மகள்களை மர்ம நபர்கள் வெட்டிச்சென்றதாக, அசோக்குமார், அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார்.அங்கிருந்தோர், வீட்டில் சென்று பார்த்தபோது, விஜயதாரணி, அருள்பிரகாஷ் இறந்து கிடந்தனர்.தவமணி, அருள்பிரகாஷினி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கெங்கவல்லி போலீசார் விசாரித்தனர். அசோக்குமார் பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அசோக்குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். அதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மது போதையில், குடும்பத்தினரை அரிவாளால் வெட்டியதை, அவர் ஒப்புக்கொண்டார். கெங்கவல்லி போலீசார், அசோக்குமார் மீது கொலை வழக்கு பதிந்து, முறைப்படி அவரை கைது செய்தனர்.