குட்டையில் குளித்தபோது பகீர்; அக்கா, தம்பி உள்பட 3 பேர் பலி
நங்கவள்ளி: சேலம் அருகே குட்டையில் குளித்தபோது, அக்கா, தம்பி உள்பட மூன்று பேர் பலியானது, பலத்த சோகத்தை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே, வீரக்கல் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவலிங்கம். இவரின் மூத்த மகள் சிவநந்தினி, 20; தனியார் கல்லுாரி மாணவி. இவரின் தம்பி சிவகிரி, 10; அரசுப்பள்ளி நான்காம் வகுப்பு மாணவன். இவர்களின் வீட்டருகே வசிக்கும் பெயின்டர் முனுசாமியின் மகள் ஜீவதர்ஷினி, 14; தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி. மூவரும் மற்றொரு சிறுமியுடன், துணி துவைக்க அருகே உள்ள கொக்கி குட்டைக்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு சென்றனர். சிவநந்தினி, சிவகிரி, ஜீவதர்ஷினி குட்டையில் குளித்தனர். நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.இதைப்பார்த்த உடன் சென்ற சிறுமி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று குட்டையில் இறங்கி தேடினர். இதில் மூவரும் அடுத்தடுத்து சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து மேட்டூர் தாசில்தார் ரமேஷ் உள்ளிட்ட வருவாயத்துறையினர், நங்கவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.