மகளிர், திருநங்கையர் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை வங்கி கடனுதவி
சேலம், தமிழக பொருளாதார வளர்ச்சியில், பெண்கள் பங்களிப்பை மேலும் அதிகரிக்க, மகளிர் தொழில் முனைவோர் மேம்பாடு திட்டம், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அடுத்த, 5 ஆண்டில் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க, அரசு உறுதி பூண்டுள்ளது. அதனால் தொழில் முனைப்பு கொண்ட மகளிர், திருநங்கையருக்கு தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி, தொழில்திறன் சார் பயிற்சி வழங்கி, 10 லட்சம் ரூபாய் வரை, பிணையின்றி வங்கி கடனுதவி வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்ட கருவிகளை கொண்டு, திட்ட தொகையில், 25 சதவீதம், அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் மானியமாக கிடைக்கும். 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் மகளிர், திருநங்கையர் பயன்பெறலாம்.அடிப்படை கல்வித்தகுதி, குடும்ப வருமான உச்சவரம்பு, இத்திட்டத்துக்கு இல்லை. தகுதி, ஆர்வம் உள்ளவர்கள் புகைப்படம், ஆதார், ரேஷன் கார்டு, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, வங்கி கணக்கு விபரங்களுடன், www.msmeonline.tn.gov.inஎன்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.பொதுத்துறை, தனியார் வணிக வங்கிகள், தாய்கோ, கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தகுதி பெற்றவை. மகளிர் தொழில் முனைவோரின் சந்தைப்படுத்தல் திறனை உயர்த்துவதற்கான ஆலோசனை, வழிகாட்டுதலும் வழங்கப்படும். இத்திட்டத்தில் அனைத்து வகை வியாபாரம், உற்பத்தி, சேவை சார்ந்த தொழில் தொடங்கலாம்.சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பு, கைத்தறி, கைவினைப்பொருட்கள் தயாரிப்பு, இன்டீரியர், பேஷன் டிசைன் ஆகிய தொழில்களுக்கு முன்னுரிமை உண்டு. அதனால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மகளிர், திருநங்கையர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொழில் முனைவோர் ஆகலாம். சேலம் மாவட்ட தொழில் மையத்தில் பொது மேலாளரை நேரடியாகவோ, 0427 - 2447878 என்ற எண்ணிலோ அழைக்கலாம். இத்தகவலை, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.