மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு தொழிலாளி உடலை வாங்க மறுப்பு
ஆத்துார்:ஆத்துார், முல்லைவாடியை சேர்ந்தவர் நாகராஜன், 32. ஆத்துார் உழவர் சந்தையில், மூட்டை துாக்கும் தொழிலாளியாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம், அவர், 'போதை'யில் இருந்ததாக, வேளாண் அலுவலர் சுரேந்தர், 'மைக்' மூலம் அறிவித்தார். இதனால் நாகராஜன், வேளாண் அலுவலரிடம் வாக்குவாதம் செய்ததால், ஆத்துார் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்று போலீசார் விசாரித்தபோது, நாகராஜன், 'போதை'யில் இருந்ததால், அவரது மனைவி ராதிகாவை வரவழைத்து அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு சென்ற நாகராஜன், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது உறவினர்கள், வேளாண் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று முன்தினம், ஆத்துார் அரசு மருத்துவமனை முன், சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து ஆத்துார் டவுன் வி.ஏ.ஓ., மது புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார், இறந்தவரது உறவினரான குமரவேல் உள்பட, 40க்கும் மேற்பட்டோர் மீது, 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ராதிகா புகார் தொடர்பாக, வேளாண் அலுவலர் சுரேந்தரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் அரசு மருத்துவமனையில், நாகராஜனின் உடலை, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தியபோது, நாகராஜன் குடும்பத்தினருக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தனர். உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மாலை, 6:00 மணி வரை, உடல் ஒப்படைக்கப்படவில்லை.