உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.1 கோடிக்கு மேல் மோசடி எல்.ஐ.சி., முகவர் மீது வழக்கு

ரூ.1 கோடிக்கு மேல் மோசடி எல்.ஐ.சி., முகவர் மீது வழக்கு

சேலம், கெங்கவல்லி அருகே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து தலைமறைவான எல்.ஐ.சி., முகவரை போலீசார் தேடுகின்றனர்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த நடுவலுாரை சேர்ந்தவர் குணசேகரன், 66. எல்.ஐ.சி., முகவரான இவர், ஆத்துார் திருமால் நகரை சேர்ந்த விவசாயி வைரமாணிக்கம், 70, என்பவரிடம், 14 லட்சம் ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி தராமல் போக்குகாட்டி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயி அளித்த புகார்படி, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அதில் ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, 30க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்த பின், அதற்கான பத்திரத்தை வழங்காமல், அதன் பேரில் கடன் பெற்றுள்ளார். தவிர ஏலச்சீட்டும் நடத்தி மோசடி செய்துள்ளார். அதன்படி, 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து தலைமறைவானதும், அதற்கு அவரது குடும்பத்தார் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. மேலும் கெங்கவல்லி போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காத நிலையில், சேலம் எஸ்.பி., - கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பிறகும் போலீசார், புகார் மனுவை கிடப்பில் போட்டது அம்பலமானது. இதையடுத்து மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் குணசேகரன் மீது நேற்று வழக்குப்பதிந்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !