கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்களிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்., 27ல் விஜய் பங்கேற்ற த.வெ.க., பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.கரூர் கலெக்டர் அலுவலக வளாக பயணியர் மாளிகையில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்துக்கு நேற்று காலை, 11:00 மணிக்கு கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், இரண்டாவது முறையாக விசாரணைக்கு வந்தார். அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள், 30 நிமிடம் விசாரணை நடத்தினர். த.வெ.க., பிரசார கூட்ட நெரிசல் தொடர்பாக, முதலில் கரூர் டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், எப்.ஐ.ஆர்., பதிவு செய்தார். அவரிடம் ஏற்கனவே கடந்த அக்., 30ல் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, கரூர் வேலுச்சாமிபுரத்தில் நெரிசல் சம்பவம் தொடர்பாக எக்ஸ் வலைதளம், பேஸ்புக் மற்றும் பல சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பலர் பதிவிட்டு இருந்தனர். அவர்களுக்கு சம்மன் அனுப்பி, சி.பி.ஐ., விசாரணை தொடங்கியுள்ளது. அதில், இந்துஸ்தான் ஜனதா கட்சி தேசிய அமைப்பாளர் ராகுல் காந்தி, கரூர் மாவட்டம் நொய்யலை சேர்ந்த விவசாயி கோகுல் கண்ணன், நாமக்கல் மாவட்டம் ஒருவத்துாரை சேர்ந்த தே.மு.தி.க., ஒன்றிய துணை செயலர் நவலடி உள்பட 4 பேரிடம் நேற்று விசாரணை நடந்தது.