கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடக்கம்
சேலம்: சேலம், சுவனேஸ்வரர் கோவிலில் உள்ள கொடி மரத்துக்கு, நேற்று காலை, 8:00 மணிக்கு, பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்தனர். தொடர்ந்து மலர் மாலைகளால் அலங்கரித்து, நந்தி கொடியை, சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க ஏற்றி, வைகாசி விசாக தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர். மாலை, யாகசாலை கலசங்கள் ஸ்தாபிதம் செய்து, பூத வாகனத்தில் வீதி உலா நடந்தது. 10 நாட்கள் விழாவையொட்டி, தினமும் காலையில் சுவாமி பல்லக்கிலும், இரவு விதவித வாகனங்களிலும் வீதி உலா வருவார். வரும், 5 மாலை, 4:00 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம், வெள்ளி ரிஷப வாகன காட்சி, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்க உள்ளது. வரும், 9 காலை, 8:30 மணிக்கு தேரோட்டம், 12ல் சப்தாபரணம், 13ல் வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.