மலைவாழ் கிராம மக்களிடம் தகராறில் ஈடுபட்ட குடிமகன்கள்
ஏற்காடு:ஏற்காட்டில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ளது கடுமரத்துார் கிராமம். இப்பகுதி மக்கள், 50க்கும் மேற்பட்டோர் பாப்பிரெட்டிப்பட்டி பைரநத்தம் பகுதியில் உள்ள குலதெய்வமான காளியம்மன் கோவிலுக்கு, நேற்று முன்தினம் சென்று பூஜைகளை முடித்துவிட்டு மதியம், 3:00 மணியளவில் ஏற்காடு திரும்பினர். அவர்களது வாகனம் ஏற்காடு மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் உள்ள ஆனைமடுவு எனும் பகுதியில் வந்தபோது, அந்த பகுதியில் உள்ள ஓடையில் மதுபோதையில் குளித்துக் கொண்டிருந்த சிலர், அவர்கள் வாகனத்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர் கோவிந்தராஜை தாக்கி விட்டு, வாகனத்தில் இருந்த பெண்களிடம் தகராறு செய்து, தகாத முறையில் நடந்துள்ளனர். இதையடுத்து வாகனத்தில் வந்த ஆண்கள் சிலர், குடிமகன்களிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்களையும் தாக்கியுள்ளனர். இந்நிலையில், மேலும் 10க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து, கிராம மக்களை தாக்கி விட்டு, பெண்கள் அணிந்திருந்த நகை, மொபைல்களை பறித்துள்ளனர்.இதனால் கிராம மக்கள் தங்களை காத்துக் கொள்ள, அந்த இடத்தை விட்டு வெவ்வேறு திசையில் ஓடி உயிர் தப்பி, அந்த வழியில் வந்த வேறு வாகனங்களில் ஏறி ஏற்காடு வந்துள்ளனர். இரவு 8:00 மணியளவில் ஏற்காடு வந்த கிராம மக்களில் ராஜி, 45, சின்னசாமி, 50, ராமர், 40, பாக்கியம், 40, குப்புசாமி, 45, கோவிந்தராஜ், 50, ஆகியோர் பலத்த காயமடைந்தனர். சில பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா சிகிச்சை பெற்றவர்களிடம் நலம் விசாரித்தார். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.