பாக்கி தொகை கேட்டு நகராட்சி ஆபீசில் ஒப்பந்ததாரர் தர்ணா
இடங்கணசாலை, இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்துக்கு புது கட்டடம் கட்ட, 2022ல், நகராட்சி நிதி, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பணி நடந்து முடிக்கப்பட்டு கடந்த ஜூன் முதல், புது கட்டடத்தில் அலுவலகம் செயல்படுகிறது. ஆனால் அதன் ஒப்பந்ததாரர் வேடியப்பன், அவருடன் பணிபுரியும் ஊழியர்களுடன், நகராட்சி அலுவலக வளாகத்தில், நேற்று காலை, 9:00 மணிக்கு தர்ணாவில் ஈடுபட்டார்.மகுடஞ்சாவடி போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, கட்டட பாக்கி தொகையை தர தாமதப்படுத்துவதாக, நகராட்சி மீது, வேடியப்பன் குற்றம் சாட்டினார். தொடர்ந்து நகராட்சி கமிஷனர் பவித்ரா, 'ஒரு வாரத்தில் பாக்கி தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என கூறியதால், அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து பவித்ரா கூறுகையில், ''கடந்த, 2022ல் பணி ஆணை கொடுத்தோம். ஓராண்டில் பணி முடிக்க வேண்டும். ஆனால், 2025ல் தான் பணியை முடித்தனர். இன்னும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளன. இதுகுறித்து, 4 முறை ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கினோம். மேலும் பணம் கொடுத்து விடுகிறோம் என, சில நாட்களுக்கு முன் தெரிவித்தும், தற்போது தேவையின்றி தர்ணாவில் ஈடுபட்டார்,'' என்றார்.