தி.மு.க., குடும்ப ஆட்சியை எதிர்த்தே நடிகர் விஜய் கட்சி தொடக்கம்
மேட்டூர்: ''தி.மு.க.வினரின் குடும்ப ஆட்சியை எதிர்த்தே, நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார்,'' என, முன்னாள் அமைச்சர் வீரமணி பேசினார்.அ.தி.மு.க., சார்பில், சேலம் மாவட்டம் மேச்சேரி கிழக்கு ஒன்றியம் வீரக்கல்புதுார், பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம், காமனேரியில் நேற்று நடந்தது. மேச்சேரி கிழக்கு ஒன்றிய செயலர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.அதில் திருப்பத்துார் மாவட்ட செயலரான, முன்னாள் அமைச்சர் வீரமணி பேசியதாவது: தி.மு.க., இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அத்யாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தி.மு.க., ஆட்சி தற்போது மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. சொத்து வரி, மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் ஆகியவற்றை பல மடங்கு உயர்த்தியதால் மக்கள் அவதிப்படுகின்றனர். தற்போது தமிழக அரசு, 9 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. தி.மு.க.,வினரின் குடும்ப ஆட்சியை எதிர்த்தே, நடிகர் விஜய், கட்சி தொடங்கியுள்ளார். 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, இ.பி.எஸ்., முதல்வராவது நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், ஜெ., பேரவை மாநில துணை செயலர் கலையரசன், மேச்சேரி மேற்கு ஒன்றிய செயலர் செல்வம், டவுன் பஞ்சாயத்து செயலர்கள் குமார், வெங்கடாசலம், மோகன்குமார், ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.