கூட்டணியால் மட்டுமே தி.மு.க., வெற்றி பெற முடியும்; மாஜி அமைச்சர் செம்மலை
ஓமலுார்: ''கூட்டணி பலத்தால் மட்டுமே, தி.மு.க.,வால் வெற்றி பெற முடியும்,'' என, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செம்மலை பேசினார்.சேலம் புறநகர் மாவட்டம், ஓமலுார் சட்டசபை தொகுதி, ஓமலுார் வடக்கு ஒன்றியம் சார்பில், அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை கருப்பூரில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசுகையில்,'' அ.தி.மு.க.வுக்கு ஆணி வேர் என்பது கிளை நிர்வாகிகள் தான். ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு, தமிழக மக்களுக்கும் பாதுகாவலர் இ.பி.எஸ்., தான். மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும், விடியா தி.மு.க.,அரசு நிறுத்திவிட்டது. விலைவாசி உயர்வு, வரி உயர்வால் மக்கள் துன்பப்படுகின்றனர். அ.தி.மு.க., அரசின் சாதனைகளை கூறி தீவிர பணியாற்ற வேண்டும்,'' என்றார்.முன்னாள் அமைச்சர் செம்மலை பேசுகையில்,'' இந்தியாவிலேயே சக்தி வாய்ந்த இயக்கம் என்றால் அது, அ.தி.மு.க.,தான். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா கூட்டணி இல்லாமலேயே, தனித்து களம் இறங்கி வெற்றி பெற்று ஆட்சி நடத்தினர். தொடர்ந்து, 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய கட்சி என்பது பெருமைக்குரியது. கூட்டணி பற்றி கவலை வேண்டாம், அது வந்தால் நமக்கு 'போனஸ்'. கூட்டணியால் மட்டுமே தி.மு.க.,வால் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும்,'' என்றார்.முன்னதாக காலையில், ஓமலுார் தெற்கு ஒன்றியம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம், ஓமலுாரில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் நடந்தது. இவர் கிளை செயலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். ஓமலுார் எம்.எல்.ஏ., மணி. முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன், ஒன்றிய செயலர் அசோகன், ஓமலுார் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், கருப்பூர் நகர செயலர் ஜீவா, காடையாம்பட்டி ஒன்றிய செயலர் சித்தேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.