1,000 ரூபாயை நினைத்து பெண்கள் ஏமாந்து விடாதீர்கள்
தாரமங்கலம்: அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் சங்ககிரி தொகுதிக்குட்பட்ட தாரமங்கலம் அண்ணா சிலை பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட மகளிரணி செயலர் லலிதா தலைமை வகித்தார்.அதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியதாவது: நாமக்கல்லில் நடந்த கிட்னி திருட்டு குறித்து, இ.பி.எஸ்., கேட்டால், 'அது திருட்டு, ஊழல் இல்லை; முறைகேடு' என கூறுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர். இதுபோல் தான் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வர். தமிழகத்தில் பாலியல் பலாத்காரம், ஊழல் அதிகளவில் உள்ளன. போலீசுக்கே இங்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அதனால் பெண்கள், 1,000 ரூபாயை பெரிதாக நினைத்து ஏமாந்து விடாதீர்கள். கஞ்சா, பாலியல், கள்ளச்சாராயம் இல்லாமல் ஏழைகள் இன்புற்று இருக்க, 2026 தேர்தலில், இ.பி.எஸ்.,க்கு ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசுகையில், ''இன்னும், 8 மாதங்கள் மட்டும் பாதுகாத்து கொள்ளுங்கள். 2026 தேர்தலில், இ.பி.எஸ்., முதல்வராகி உங்களை பாதுகாத்துக்கொள்வார்,'' என்றார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாஜலம், எம்.எல்.ஏ.,க்கள் சங்ககிரி சுந்தரராஜன், ஓம லுார் மணி, தாரமங்கலம் நகர செயலர் பாலசுப்ரமணியம், ஒன்றிய செயலர்கள் காங்கேயன், மணிமுத்து, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், மகளிரணியினர் பங்கேற்றனர்.