பார்கின்சன்ஸ் நோய்க்கு டி.பி.எஸ்., சிகிச்சை;சென்னை அப்போலோ மருத்துவர் தகவல்
சேலம்:'பார்கின்சன்ஸ்' நோய்க்கு, டி.பி.எஸ்.,(டீப் பிரெய்ன் ஸ்டிமுலேசன்) எனும் அதிநவீன சிகிச்சை முறை, அப்போலோ மருத்துவமனையில் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை அப்போலோ மருத்துவர் விஜயசங்கர், சேலத்தில் நேற்று அளித்த பேட்டி:இந்தியாவில் இள வயதினருக்கு, 'பார்கின்சன்ஸ்' நோய் பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. வழக்கமாக இந்நோய், 60 வயதை கடந்தவர்களுக்கு வரும்.இந்நோய் பாதிக்கப்பட்டோருக்கு கை, கால்களில் நடுக்கம், வேகமாக நடக்க முடியாதது, நினைவாற்றல் இழப்பு என, அன்றாட வாழ்க்கையை, மற்றவர் துணையின்றி வாழ முடியாத நிலை ஏற்படுகிறது.இதற்கு தீர்வாக, டி.பி.எஸ்.,(டீப் பிரெய்ன் ஸ்டிமுலேசன்) எனும் அதிநவீன சிகிச்சை முறை, அப்போலோ மருத்துவமனையில் செய்யப்படுகிறது. இதன்மூலம் இயல்புக்கு மாறான மூளை செயல்பாட்டை சரிசெய்து, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது வேலைகளை மற்றவர்கள் துணையின்றி செய்து கொள்ள முடியும். இந்த சிகிச்சை முறையால் நோய் முழுமையாக குணமாகாது.அதேநேரம், நோயாளி தேவைக்கு ஏற்ப, இதன் செயல்பாடுகளை மாற்றி அமைத்து அவர்கள் சுதந்திரமாக நடமாட உதவும். தமிழகத்தில், 'பார்கின்சன்ஸ்' நோய் பற்றிய விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது. மருத்துவர்கள் பரிந்துரைப்படி மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொண்டு உடற்பயிற்சி, ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறைகளை கடைப்பிடித்தால், இந்த நோய் மட்டுமல்ல, எந்த நோயும் நம்மை பாதிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.