விபத்துக்கு பின் நிற்காமல் சென்ற டிரைவர் ஜாமினில் வர முடியாத பிரிவில் கைது
பனமரத்துப்பட்டி, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதால், ஜாமினில் வர முடியாத பிரிவில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.பனமரத்துப்பட்டி அருகே பள்ளிதெருப்பட்டியை சேர்ந்தவர் முருகன், 58. ஊராட்சி முன்னாள் தலைவரான அவர், வக்கீலாக உள்ளார். கடந்த, 18 அதிகாலை, குரால்நத்தம் அருகே வாகனம் மோதி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றது. பனமரத்துப்பட்டி போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திய, கோழி பாரம் ஏற்றி சென்ற சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து அதன் டிரைவரை தேடினர்.நேற்று, பனமரத்துப்பட்டி பிரிவில், விபத்துக்கு காரணமான சரக்கு வாகன டிரைவரான, பனமரத்துப்பட்டி, மாருதி நகரை சேர்ந்த பிரசாந்த், 29, என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றதோடு, போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் தலைமறைவானதால், ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் பிரசாந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்' என்றார்.