போதை ஹெச்.எம்., சஸ்பெண்ட்
சேலம்:சேலம் மாவட்டம் இடைப்பாடி, ஆடையூர் நாச்சிமுத்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராஜ், 55. இவர் கடந்த, 5 மதியம், மாணவர்களை, கடைக்கு அனுப்பி தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து, அதில் மதுவை கலந்து வகுப்பறையிலேயே அருந்தினார். பின் போதையில் மாணவ, மாணவியரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்து திரண்ட பெற்றோர், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி, பள்ளியை முற்றுகையிட்டனர். பூலாம்பட்டி போலீசார், இடைப்பாடி வட்டார கல்வி அலுவலர் கோகிலா பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், பெற்றோர் கலைந்து சென்றனர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு பின், தங்கராஜ் மீது, இரு பிரிவுகளில் வழக்குப் பதிந்த போலீசார், அவரை ஜாமினில் விடுவித்தனர். அதன் எதிரொலியாக, தங்கராஜ், நேற்று முன்தினம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதன் உத்தரவு, நேற்று அவரிடம் வழங்கப்பட்டதாக, மாவட்ட கல்வி அலுவலர் தங்கராசு(தொடக்க கல்வி) தெரிவித்தார்.